பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

தமிழ் வளர்த்த நகரங்கள்


தீர்த்தம் என்று புராணம் புகலும். முகம்மதலியின் தானுபதியான மாவஸ்கான் என்பவன் மனைவி திராத பிணிவாய்ப்பட்டுப் பெரிதும் வருந்தினாள். சிலர் அறிவுரையின் பேரில் அவள் இப் பொற்றாமரைத் தீர்த்தத்தில் மூழ்கித் தன் பெருநோய் நீங்கப்பெற்றாள். அதனால் களிப்புற்ற அம் முகம்மதியத் தானபதி இக் கோவிலின் மேலைச் சுற்றுவெளியில் ஒரு சிறு கோவிலை யமைத்தான். அதில் நெல்லையப்பரையும் வடிவம்மையையும் எழுந்தருளுவித்து, நெல்லையப்பரை அனவரதகாதன் என்று போற்றி வழிபட்டான்.

அப்பருக்குத் தெப்பவிழா

இப் பொற்றாமரைக் குளத்தில் மாசித் திங்கள் மகநாளில் அப்பர்பெருமானுக்குத் தெப்ப விழா மிகச் சிறப்பாக நடைபெறும். அப்பர் தமது வாழ்நாளில் நெல்லைக்கு எழுந்தருளிப் பதிகம் பாடிப் பரவியது ஒரு மாசி மகநாளாகும். அதனை நினைவூட்டவே இத் தெப்பவிழா நிகழ்கின்றது. சமணர்கள் அவரது உடம்புடன் கட்டித் தள்ளிய கல்லையே தெப்பமாகக்கொண்டு, நமச்சிவாயப் பதிகம் பாடிக் கரையேறிய திருநாவுக்கரசருக்குத் தெப்பவிழா எடுக்கும் சிறப்பை இங் நெல்லையிலன்றிப் பிற தலங்களில் காணவியலாது. மக்கள் பிறவிக்கடல் நீந்தி, வீடுபேருகிய இன் பக்கரை அடைவதற்கு இறைவன் திருநாமமே துணையென்னும் உண்மையை இந் நிகழ்ச்சி ஆண்டுதோறும் மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது.

இத்தகைய பல்வேறு சிறப்புக்களே யுடைய நெல்லைத் திருக்கோவில், நெல்லை மாநகரின் எல்லை யில்லாப் பெருமைக்குத் தக்க சான்றாகத் தழைத்து வருகிறது.