பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தில்லை மாநகரம்
11. தில்லையின் சிறப்பு

தில்லைச் சிதம்பரம்

சைவ சமயத்தைச் சார்ந்த மக்களுக்குச் சிறப்பு வாய்ந்த தெய்வத்தலம் தில்லையாகும். அதனால் சைவர்கள் இத் தலத்தினைக் ‘கோயில்’ என்றே குறிப்பிடுவர். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்புற்ற தலம் இதுவாகும். ஆதலின் இத் தலத்தைப் ‘பூலோக கயிலாயம்’ என்றும் போற்றுவர். ஐம்பெரும் பூதங்களின் வடிவாக இறைவன் விளங்குகிறான் என்ற உண்மையை விளக்கும் தலங்களுள் இது வான் வடிவாக விளங்கும் உண்மையை விளக்குவது. அதனாலயே இத் தலத்திற்குச் ‘சிதம்பரம்’ என்னும் பெயர் வழங்கலாயிற்று. சிதம்பரம் என்ற சொல்லுக்கு ஞானவெளி என்பது பொருளாகும்.

தலத்தின் பிற பெயர்கள்

இத் தலம் அமைந்துள்ள நிலப்பகுதி, ஒரு காலத்தில் தில்லை மரங்கள் நிறைந்த பெருங்காடாக இருந்தமையால் தில்லையெனப் பெயர்பெற்றது. புலிக் கால் முனிவராகிய வியாக்கிரபாதர் தவங்கிடந்து இறைவன் திருக்கூத்தைக் கண்டு மகிழ்ந்த தலமாதலின் புலியூர் என்றும், பெரும்பற்றப் புலியூர் என்றும் வழங்கலுற்றது. உலக உதயமும் ஆன்மாக்களின் இதயமும் இத் தலத்தில் உள்ளன என்று ஆன்றோர்