பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

தமிழ் வளர்த்த நகரங்கள்


கருதுவதால் இதனைப் பொது, சிற்றம்பலம், புண்டரிக புரம், தனியூர் என்ற பெயர்களால் குறிப்பதுண்டு.

சைவர்களின் தெய்வக்கோயில்

இந்நகர் கோயில் என்ற சிறப்பான பெயரால் குறிக்கப்பெற்றதற்கேற்ப எங்கணும் கோயில்களே நிறைந்து காணப்படும். பிள்ளையார் கோயில்கள்தாம் எத்தனை ! வேடன்பிள்ளையார், செங்கழுநீர்ப்பிள்ளையார், தேரடிப்பிள்ளையார், கூத்தாடும்பிள்ளையார், நரமுகப்பிள்ளையார், முக்குறுணிப்பிள்ளையார், சேத்திர பாலப்பிள்ளையார் இன்னும் பல பிள்ளையார் கோயில்கள் இந்நகருள் உள்ளன. காளியம்மன், மாரியம்மன், தில்லைக்காளியம்மன் போன்ற பல அம்மன்களின் திருக் கோவில்கள் காணப்படுகின்றன. திருப்புலிச்சரம், அனந்தீச்சரம், கமலிச்சரம் போன்ற பெருங்கோவில்களும் உள்ளன. சிவகங்கை முதலான பல தீர்த்தங்களாலும் இத்தலம் சிறப்புற்று விளங்குகிறது.

தில்லையைப்பற்றிய நூல்கள்

தில்லைத்தலத்தின் சிறப்பை விளக்கும் நூல்கள் தமிழிலும் வடமொழியிலும் பல உள்ளன. தமிழிலுள்ள கோயிற் புராணம், சிதம்பர புராணம், சபா நடேச புராணம், புலியூர்ப் புராணம், தில்லைத் திரு வாயிரம், சிதம்பரச் செய்யுட் கோவை, மும்மணிக் கோவை, சிதம்பர மான்மியம், தில்லைவன மான்மியம், சிதம்பர விலாசம், சிதம்பர ரகசியம், தில்லைக் கலம்பகம், தில்லையுலா, திருக்கோவையார் முதலான நூல்கள் தில்லைச் சிறப்பைத் தெள்ளிதின் சொல்லு வனவாகும். மூவர் பாடிய தேவாரப் பாக்களிலும்,