பக்கம்:தமிழ் வளர்ந்த கதை.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

தமிழ் வளர்ந்த கதை

வசனம்

இந்த நக்கீரரைப் பற்றி எல்லாரும கொஞ்சம் தெரியவேண்டும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே பாண்டிய மன்னனால் அமைக்கப்பட்ட பழந்தமிழ்ச் சங்கத்திற்குத் தலைவராக வீற்றிருந்த பேராற்றல் வாய்ந்த பெரும் புலவர் நக்கீரர். அந்தணர் மரபில் தோன்றிய செந்தமிழ்ப் புலவர். தமிழ்ப்பெருங் கடவுளாகிய முருகப்பெருமானது திருவருளைப் பெற்ற தெய்வக் கவிஞர், ஒருசமயம் இவருக்கும் சிவபெருமானுக்குமே சொற்போர்—வாக்குவாதம் நடந்தது. சிவபெருமான் பாடிய செந்தமிழ்ப் பாட்டில் பொருட் குற்றம் இருப்பதாக எடுத்துக் காட்டினார் இந்தப் புலவர். அப்போது சும்மாவிட்டாரா சிவன் ! தமது நெற்றிக் கண்ணையும் கற்றைச் சடையையும் காட்டிப் பயமுறுத்தினார். அவற்றைக் கண்டு அஞ்சினாரா புலவர் ? இல்லை, இல்லை. 'நெற்றிக் கண்ணைக் காட்டினும் குற்றம் குற்றமே! உடம்பெல்லாம் கண்களாகக் காட்டினாலும் அஞ்சேன் !' என்று நெஞ்சத் துணிவுடன் நிமிர்ந்து பேசினார். நக்கீரரின் வீரத்தை என்னென்பது ! அத்தகைய நாவீறு படைத்த நக்கீரர்கள் நம் நாட்டிற்குப் பலர் தேவை.

நக்கீரர் காலத்திலே குயவன் ஒருவன் — கொண்டான் என்ற பெயரைக் கொண்டவன், வட நாட்டவர் வலைக்குள் சிக்கி, ஆரியப்பித்தனாகி, 'ஆரியம் நன்று தமிழ் தீது' என்று சொல்லிக்கொண்டே மதுரைத் தெருவெங்கும் முரசு கொட்டினான். அவனைக் கண்டார் நம் நக்கீரர். அளவில்லாத கோபம் கொண்டார். செந்தமிழ்ப் பாண்டி நாட்டின் தலைநகரமாகிய இந்த மதுரைமா நகரத்திலா இந்த வார்த்தை சொன்னாய்! "நீ ஆனந்தம் சேர்க என்று சபித்தார். செத்தொழிந்தான் அந்தக் குயவன்.