பக்கம்:தமிழ் வளர்ந்த கதை.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை


தெய்வத் தமிழ் வழங்கும் தென்பாண்டி நாட்டிற்கே உரிய நல்லிசையாகிய வில்லுப்பாட்டு, கற்றவரல்லாத மற்றவர்க்கே களிப்பை விளைப்பதாய் விளங்கியது. சில ஆண்டுகளாகக் கற்றவர்க்கும் கழிபேருவகையூட்டும் கலையாக மாறி வருகின்றது.

காட்டகத்தே வேட்டையாடப் புகுந்த வில்வீரன், வேட்டையாடிக் களைப்புற்றுத் தண்ணிழல்தரும் மரமொன்றன் அடியில் அமர்ந்தான். தன் கையமர்ந்த வில்லைத் தரையில் சார்த்தி, அவ் வில்நாணில் அம்புக் கோலால் தாளவறுதி தோன்றத் தாக்கினான். அத் தாளத்திற்கேற்பப் பண்ணமைந்த தமிழ்ப்பாடல் பாடினான். அதனால் களைப்பு நீங்கிக் களிப்போங்கப் பெற்றான்.

பண்டுதொட்டு இவ் வில்லிகையில் சிறு தெய்வக் கதைகளே பயின்று வந்தன. சிறந்த வரலாறுகளை இவ் வில்லிசையில் அமைத்துப் பாடினால் கல்லார்க்கும் கற்றவர்க்கும் நல்ல கருத்துகள் எளிதில் உள்ளத்தில் பதியும் என்னும் எண்ணத்தால் 'தமிழ் வளர்ந்த கதை’ என்னும் இவ் வில்லிசைப் பாடலை இயற்றினேன். இதனை எங்கள் நெல்லை அருணகிரி இசைக் கழகத் தமிழ்த்திருநாள் அரங்கத்தில் அரங்கேற்றினேன். இதனைக் கேட்ட பல்லாயிரக் கணக்கான மக்கன் அகமகிழ்ந்து பாராட்டினர். வில்லுப்பாட்டில் இஃதொரு மறுமலர்ச்சியென வியந்து போற்றினர்.

2