பக்கம்:தமிழ் விருந்து.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

特2 -தமிழ்_விருந்து பெயரிட்டார்கள். இக் காலத்தில் அது கொரநாடு என்ற பெயரோடு மாயவரத்திற்கு அருகே இருக்கின்றது. அங்கு நெய்யப்படும் புடைவை கொரநாட்டுப் புடைவை என வழங்குகின்றது. மலையாள மன்னர் குடும்பத்தில் நடைபெறும் திருமணத்திற்குப் 'புடகொட என்று பெயர். புடகொட என்பது புடைவைக் கொடை என்பதன் திரிபேயாகும். பெண்ணுக்குப் புடைவை கொடுத்தலே திருமணத்தின் சிறந்த அம்சமாகக் கொள்ளப்பட்டதென்பது இதனால் நன்கு விளங்கும். காதல் மண முறையை விவரித்துக் கூறும் தமிழ் நூல்களில் காதலன் தன் காதலிக்கு மலராலும் தளிராலும் செய்யப்பட்ட தழை என்னும் ஆடையைக் கொடுத்து மகிழும் பழக்கம் குறிப்பிடப் படுகின்றது. அவ் வழக்கம் நாளடைவில் திருந்திக் காலத்திற்கேற்றவாறு புடைவைக் கொடையாயிற்று என்று கொள்ளுதல் பொருந்தும். நாடாளும் அரசனைக் குறிப்பதற்குத் தமிழிலும் மலையாளத்திலும் பல சொற்கள் உண்டு. கோ, கோன், கோமான் இம் மூன்று சொற்களும் தமிழிலும் மலையாளத்திலும் அரசனைக் குறிக்கும். இளவரசனை இளங்கோ என்பர். கோயில் என்னும் சொல் தமிழிலும் மலையாளத்திலும் அரசனுக்குரிய அரண்மனையையும் கடவுளுக்குரிய ஆலயத்தையும் உணர்த்துவதாகும். ஆனால், இப்பொழுது தமிழ்நாட்டில் கோயில் என்பது பெரும்பாலும் ஆலயத்திற்கே பெயராய் அமைந்து விட்டது. சைவர்களுக்குக் கோயில் என்பது சிதம்பரம். வைணவர்களுக்குக் கோயில் பூரீரங்கம் என்னும் திருவரங்கம். .