பக்கம்:தமிழ் விருந்து.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 தமிழ் விருந்து வழிபாடு செய்வார்கள். தமிழ்நாட்டு ஐயனாரே மலையாளத்தில் ஐயப்பனாக விளங்குகிறார். ஆரியன் என்பது ஐயப்பனுக்கு ஒரு பெயர். ஆகவே, ஆரியன் காவு என்று ஐயப்பன் சோலை அழைக்கப்படுகின்றது. இன்றும், மலையாள தேசத்தில் நாகம் வாழ்கின்ற காவுகள் ஆயிரக் கணக்காக உண்டு. பாம்புக் காவு என்பது அவற்றின் பெயர். ஒவ்வொரு நாயர் இல்லத்திலும் பாம்புக் காவு உண்டு. அக் காவில் முளைக்கின்ற மரஞ் செடிகளை வெட்டுவதில்லை. அங்கு வாழ்கின்ற பாம்புகளுக்குப் பால் வார்ப்பார்கள். இவ்வாறு காவில் தெய்வத்தை வழிபாடு செய்யும் வழக்கம் தமிழ் நாட்டிலும் இருந்தது. சீர்காழிக்கு அருகே ஒரு சிவஸ்தலம் உள்ளது. அதன் பெயர் கோலக்கா, " கூத்தனை, குருமாமணி தன்னை, கோலக் காவினில் கண்டுகொண் டேனே" என்பது தேவாரம் கா என்பது சோலை; அதுவே மலையாளத்தில் காவு என்றாயிற்று. தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலங்களுள் பல காவுகள் உண்டு. திருச்சிராப் பள்ளிக்கு அண்மையில் உள்ள திருஆனைக்கா இப்பொழுது திருவானைக் காவல் என வழங்குகின்றது. நெல்லி மரச் சோலையாகிய திருநெல்லிக்கா இக் காலத்தில் திருநெல்லிக்காவல் என்று பெயர் பெற்றுள்ளது. ஆகவே, சோலையைக் கோயிலாகக் கொண்டு வழிபாடு செய்த பண்டை வழக்கத்தைத் தமிழும் மலையாளமும் நன்கு காட்டுகின்றன. இதுகாறும் கூறியவற்றால் பழக்க வழக்கங்களிலும், சொல்லாக்கத்திலும் தமிழகத்தார்க்கும் மலையாளத் தார்க்கும் உள்ள ஒருமைப்பாடு நன்கு விளங்கும்.