பக்கம்:தமிழ் விருந்து.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

406 தமிழ் விருந்து "ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்துபெற்றுப் பையலென்ற போதே பரிந்தெடுத்துச்-செய்யஇரு கைப்புறத்தி லேந்திக் கனகமுத்தம் தந்தாளை எப்பிறப்பிற் காண்பேன் இனி" என்ற பாட்டில் திங்கள் என்பது மாதம் என்ற பொருளைத் தருகின்றது. இவ்வாறு இலக்கியத்தில் பயில்கின்ற சொல் கன்னடத்தில் கற்றோரும் மற்றோரும் வழங்குகின்ற பதமாக இருக்கின்றது. நிலவின் ஒளியைத் "திங்கள் விளக்கு' என்பர் கன்னடியர் மாதத்தைத் திங்கள் என்றே கூறுவர். மற்றொரு பழைய தமிழ்ச் சொல்லைப் பார்ப்போம்: பழந்தமிழில் கரைதல் என்றால் அழைத்தல். காக்கை தன் இனத்தை அழைத்துக் கலந்துண்னும் தன்மையைத் திருவள்ளுவர் கூறுகின்றார் : "காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும் அன்னநீ ரார்க்கே உள" என்பது திருக்குறள். காக்கை ஒளித்து உண்ணாமல் இனத்தை அழைத்து உண்ணும்; அத் தன்மை வாய்ந்தவர்க்கே இவ்வுலகில் ஆக்கம் உண்டு என்பது இக் குறளின் கருத்து. கரை என்ற சொல் மற்றொரு பொருளிலும் ஆளப்பட்டுள்ளது. கடலிற் செல்லும் கப்பல்களுக்குக் கரையிருக்கும் இடத்தைக் காட்டு வதற்காகக் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள விளக்கைத் தீப ஸ்தம்பம் என்பர் வடமொழியாளர்; ஆங்கிலவர் Light House என்பர்; கலங்கரை விளக்கம் என்பர் தமிழர். சிலப்பதிகாரத்தில் கலங்கரை விளக்கம் குறிக்கப்பட்டுள்ளது.