பக்கம்:தமிழ் விருந்து.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியத்திற்_கண்ட அமைச்சு *33 இத் தகைய நல்லமைச்சர் அயோத்தி அரசனது சபையில் இருந்து அணிசெய்தார்கள் என்று கம்ப ராமாயணமும் கூறுகின்றது. " தம்முயிர்க்கு உறுதி எண்ணார் தலைமகன் வெகுண்ட - போதும் வெம்மையைத் தாங்கி நீதி விடாதுநின் றுரைக்கும் வீரர் செம்மையில் திறம்பல் செல்லாத் தேற்றத்தார் தெரியும் காலம் மும்மையும் உணர வல்லார் ஒருமையே மொழியும் நீரார்" என்று அயோத்தி அமைச்சர்களைக் குறிக்கின்றார் கம்பர். அந் நாட்டு அமைச்சர்கள் தம் சுய நலத்தைக் கருதியவரல்லர், மன்னன் கருத்திற்கு மாறாகப் பேசினால் தம் சீரும் சிறப்பும் சிதையுமே என்று சிந்தித்தவரல்லர், அமர்க்களத்தில் அஞ்சாது நின்று போர்புரியும் வீரரைப்போல் அரசனது அவைக் களத்தில் நீதி முறையை அஞ்சாது எடுத்துரைத்தார்கள். இத் தன்மை வாய்ந்த அமைச்சரைத் துணைவராகப் பெற்றமையாலேயே தசரத மன்னன் நெடுங்காலம் செங்கோல் செலுத்துவானாயினான். இதற்கு நேர்மாறான முறை இலங்கை யரசாங்கத்தில் அமைந்திருந்தது. இலங்கையிலிருந்த அரசு ஒரு வல்லரசு அந் நாட்டுக் குடிகள் அனைவரும் வீரர்கள். வேந்தனோ வீரருள் வீரன். அவன் சபையிலும் அமைச்சர்கள் இருந்தார்கள். ஆனால், அவர்கள் அரசன் கருத்தறிந்து அதற்கிசைந்து பேசுபவர்; இச்சகம் பேசும் கொச்சை அமைச்சர். இத் தன்மையைச் சீதையின் வாய்மொழியால் காட்டுகின்றார்