பக்கம்:தமிழ் விருந்து.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 தமிழ் ിത്ര്ള இதனாலேயே 'பூவை என்னும் பெயர் பெண்ணுக்கு அமைவதாயிற்று. பூவிற்குப் பல பருவங்களை வகுத்தவாறு பெண்ணுக்கும் பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை முதலிய பருவங்களைப் புலவர்கள் வகுத்தார்கள். இல் வாழ்க்கையே பெண்களுக்கு நல்வாழ்க்கை, அவ்வாழ்க்கையில் தலைப்படும்பொழுது பெண்மை மணக்கின்றது; சிறந்த இன்பம் பயக்கின்றது. ஆதலால், கல்யாணம் என்னும் மங்கலத்தை 'மணம்' என்று அறிந்தோர் கூறுவாராயினர். எனவே, பூவின் தன்மைக்கும் பெண்ணின் நீர்மைக்கும் உள்ள ஒற்றுமையாலேயே மணம் என்ற சொல் கல்யாணத்தைக் குறிப்பதாயிற்று. இயற்கையான நிகழ்ச்சிகளில் சிறந்த உணர்ச்சி களைக் கற்பிக்கும் முறை கவிகளிடம் உண்டு. அயோத்தி மாநகரில் ஒரு தீமை நிகழ்ந்துவிட்டது. எல்லோர்க்கும் இனியவனாகிய இராமன் நாட்டை விட்டுக் காட்டுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டது. தலைமகன் காட்டுக்குச் செல்ல வேண்டும் என்று கைகேயி வற்புறுத்தினாள். மன்னவனாகிய தசரதன் கைகேயியின் கொடுமையைப் பொறுக்க மாட்டாது மண்மேல் மயங்கி விழுந்தான். இஃது இராப்பொழுதில் மாளிகையில் நிகழ்ந்தது. இந்தக் கொடுமையை அயோத்தியில் உள்ள கோழிகள் அறிந்தன; மனங் கலங்கின; 'ஊரார் எல்லாம் இதை அறியாமல் உறங்குகின்றார்களே' என்று ஏங்கின; துன்பம் பொறுக்கமாட்டாமல் இரு சிறகாலும் வயிற்றில் அறைந்துகொண்டன. குய்யோ முறையோ என்று கூவி ஊராரையெல்லாம் அழைத்தன என்று கவிஞர் கூறுகின்றார் .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_விருந்து.pdf/14&oldid=878393" இலிருந்து மீள்விக்கப்பட்டது