பக்கம்:தமிழ் விருந்து.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலையும் கற்பனையும் 13 "எண்த ருங்கடை சென்ற யாமம் இயம்பு கின்ற ஏழையால் வண்டு தங்கிய தொங்கல் மார்பன் மயங்கி விம்மிய வாறெல்லாம் கண்டு நெஞ்சு கலங்கி அஞ்சிறை யான காமர் துணைக்கரம் கொண்டு தம்வயி றெற்றி எற்றி விளிப்ப போன்றன கோழியே" என்பது கம்பர் பாட்டு விடியுமுன்னே சிறகடித்துக் கூவுகின்ற கோழியின் செய்கையில் சோகத்தை ஊட்டிக் காட்டினார் கவிஞர். காலையிற் கூவும் கோழியின் குரல், கேட்போர் மனோபாவத்திற் கேற்றவாறு அமைகின்றது. முருக பக்தர் ஒருவர் கோழியின் குரலைக் கேட்கின்றார். கோழி முருகனுக்கு உகந்த பொருள்களுள் ஒன்று. அது முருகன் கொடியிலே நின்று கூவும் பெருமை வாய்ந்தது. ஆதலால், கோழியின் குரல் வெறுங் கூக்குரல் அன்று; தெய்வம் மணக்கும் குரல் என்று அவ் வடியார்க்குத் தோன்றுகிறது. 'கொக்கறுகோ, கெர்க்கறுகோ' என்று கூவும் கோழியின் கருத்தை அவர் விளக்குகின்றார். கொக்கு என்பது மாமரம். மாறுபட்ட சூரன் மாமரமாகி நின்றான். அவன்ன அறுத்தார் முருகப் பெருமான். ஆதலால், கொக்கறுத்த கோமானாகிய முருகனையே கோழி புகழ்ந்து போற்றுகின்றது என்று அப் பெரியார் கூறுகின்றார். ஆகவே, கலைகளில் உள்ள கற்பனை, நாட்டின் இயல்பிற்கும், கலைவாணரது மனோபாவத்திற்கும் ஏற்றவாறு அமையும் என்னும் உண்மை நன்கு விளங்குவதாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_விருந்து.pdf/15&oldid=878416" இலிருந்து மீள்விக்கப்பட்டது