பக்கம்:தமிழ் விருந்து.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 தமிழ் விருந்து யாரும் பணிந்திடும் தெய்வம் - பொருள் யாவினும் நின்றிடும் தெய்வம் பாருக்குள் ளேதெய்வம் ஒன்று - இதில் பற்பல சண்டைகள் வேண்டாம். என்பது பாரதியாரின் அறிவுரை. அன்பே கடவுளின் வடிவம் என்று எல்லாச் சமயங்களும் இசைந்து கூறுகின்றன. எனவே, அன்பு வடிவாகிய கடவுளை அறிவதற்கும், அவர் அருளைப் பெறுவதற்கும் அன்பையே சாதனமாகக் கொள்ள வேண்டும் என்பது சொல்லாமலே அமையும். 'எவ்வுயிர்க்கும் அன்பாய் இரு' என்று இவ் வுண்மையைச் சுருங்கச் சொல்லி விளங்கவைத்தார் ஒரு பெரியார். அன்பு, தெய்வத்தன்மையுடையதாதலால் அதற்கு எல்லையில்லை; உற்றார் மற்றார் என்ற வேற்றுமை இல்லை; சாதி குலம் முதலிய பேதங்கள் இல்லை. எல்லாரும் ஒர் குலம்; எல்லோரும் ஓரினம் என்பதே அன்புடையார் கொள்கை, கடவுளிடத்து நாம் செலுத்தும் அன்பு, பக்தி யென்று சிறப்பித்துச் சொல்லப்படும். பக்தி முதிர்ந்த நிலையில் தெய்வப் பித்து வந்து எய்தும். இவ் வுலகில் எல்லாரும் பித்தரே என்றார் ஒரு பெரியார். சிலர் பொருளாசை பிடித்த பணப்பித்தர். சிலர் பெண்ணாசை பிடித்த பெரும் பித்தர். சிலர் புகழாசை பிடித்த புகழ்ப் பித்தர். ஒரு சிலர் கடவுள் வெறி பிடித்த தெய்வப் பித்தர். தெய்வப் பித்தராகவே வாழ விரும்புவர் பக்தர். கடவுளைப் பெரும் பித்தன் என்று பாடினாரும் உண்டு. " தென்பால் உகந்தாடும் தில்லைச்சிற் றம்பலவன் பெண்பால் உகந்தான் பெரும்பித்தன் கானேடீ"