பக்கம்:தமிழ் விருந்து.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புராதனப் போர் - படையெடுப்பு 15 புறத்தே போக்குவார்கள் போர்க்களத்தில் பச்சிளம் பாலகரைக் கொல்ல மாட்டார்கள் முதியவர்மீதும் படைக்கலங்களைத் தொடுக்கமாட்டார்கள்; பயன் தருகின்ற பசுக்களை வதைக்க மாட்டார்கள், இஃது அறப்போர் முறை என்று புலவர்களால் போற்றப் படுகின்றது. பழந்தமிழ் நூல்களில் இவ் வுண்மையைக் காணலாம். மதுரை மாநகரில் கணவனைப் பறி கொடுத்த கண்ணகி அந் நகரத்தைச் சுட்டெரிக்க முற்பட்டாள். அப் பொழுது அவ் வீர பத்தினியின் முன்னே அக்கினி தேவன் தோன்றி, 'யார் யாரை அழிக்க வேண்டும்?' என்று கேட்டான். அதற்குக் கண்ணகி, 'பார்ப்பார், அறவோர், பசு, பத்தினிப் பெண்டிர், மூத்தோர், குழவி எனும் இவரைக் கைவிட்டுத் தீத்திறத்தார் பக்கமே சேர்க' என்று ஏவினாள். போர்க்களத்தில் அஞ்சாது நின்று அமர் விளைக்கும் வீரரை மறவர் என்று தமிழ்நாடு அழைத்தது. மறம் என்ற சொல்லுக்கு வீரம் என்பது பொருள். எனவே, மறவர் என்பர் வீரராவர். அவர்கள், மனத்திண்மையும் உடல் திண்மையும் உடையவராய், வில்லும், வாளும், வேலும் தாங்கி வெம்போர் புரிவார்கள்; போர்க் களத்தில் முகத்திலும் மார்பிலும் படுகின்ற வடுக்களைப் பொன்னினும் மணியினும் அருமையாகப் போற்று வார்கள் போரற்ற நாளெல்லாம் பயனற்ற நாளென்று கருதுவார்கள். இத் தகைய வீரர்கள் கொற்றவை என்னும் தெய்வத்தை வணங்கினார்கள். வெற்றி தரும் தெய்வமே கொற்றவையாகும். அத் தெய்வத்தின் அருள் பெற்று மறவர் போர்புரிந்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_விருந்து.pdf/17&oldid=878445" இலிருந்து மீள்விக்கப்பட்டது