பக்கம்:தமிழ் விருந்து.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புராதனப் போர் படையெடுப்பு 2售 நாட்டை நண்ணினான் பொங்கி யெழுந்த பகையரசர் சேனையைச் சிதற அடித்தான்; வாகை மாலை சூடினான்; தமிழரசரைப் பழித்துப் பேசிய சிற்றரசர் இருவரையும் சிறை செய்து சினம் தீர்ந்தான்" என்று சிலப்பதிகாரம் கூறுகின்றது. இவ் வரலாற்றாலும் கரிகால் சோழனுடைய சரித்திரத்தாலும் தமிழ்நாட்டரசர்கள் போர்க்களத்தில் வீரப்புகழ்வாய்ந்து விளங்கினார்களென்ற செய்தி நன்றாகத் தெரிகின்றது. சோழ நாட்டுப் புலிக் கொடியைக் கரிகாற்சோழன் இமயமலையில் ஏற்றினான் சேரநாட்டுச் செங்குட்டுவன் கற்பின் செல்வியாகிய கண்ணகிக்கு இமயமலையிற் சென்று சிலையெடுத்து வெற்றி வீரனாக மீண்டுவந்தான். இவ் வரசர்கள் தமிழ்நாட்டின் வீரப் புகழை விளக்கினார்கள். இவருக்குப் பின்னே வந்த கங்கை கொண்ட சோழன், குலோத்துங்கன் முதலாய மன்னர் நிகழ்த்திய அரும் பெரும் போர்களைத் தமிழ்ப் புலவர்கள் பாட்டாலும் உரையாலும் பாராட்டினார்கள். கலிங்க நாட்டின்மீது குலோத்துங்கன் சேனாதிபதியாகிய கருணாகரன் படையெடுத்து, அந் நாட்டு அரசனை வென்று, வாகை மாலை சூடிய வரலாறு கலிங்கத்துப் பரணியில் இலங்குகின்றது. இவ்வாறு முற்காலத் தமிழ் மன்னரும், இடைக்காலத் தமிழ் மன்னரும் போர் முகத்தில் காட்டிய வீரம் இக் காலத்தினருக்கு ஊக்கத்தையும் ஆர்வத்தையும் ஊட்டுவதாகும். "விண்ணை இடிக்கும் தலைஇம யம்எனும் வெற்பை யிடிக்கும் திறலுடையார் - சமர் பண்ணிக் கலிங்கத் திருள்கெடுத் ததமிழ்ப் பார்த்திபர் நின்ற தமிழ்நாடு"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_விருந்து.pdf/23&oldid=878459" இலிருந்து மீள்விக்கப்பட்டது