பக்கம்:தமிழ் விருந்து.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போர்க்களங்கள் 23 வாய்ந்து விளங்கினார்கள். இத் தகைய மறக்குடியில் தோன்றினாள், ஒரு மங்கை தன் மனப்பான்மைக்கேற்ற வீரன் ஒருவனை மணந்து ஒரு வீரக்குழந்தையைப் பெற்றாள். அவள் தமையனும் ஒரு தீரன். இவர்கள் ஒரு குடும்பமாக இன்புற்று வாழ்ந்து வருகையில் நாட்டிலே பெரும் போர் மூண்டது. போர் முழக்கம் கேட்டபோது அம் மங்கையின் தமையன் போர்க்கோலம் பூண்டு அமர்க்களம் போந்தான்; கண்டோர் வியக்கக் கடும்போர் புரிந்தான்; மாலைப் பொழுதில் மார்பிலே அடிபட்டு இறந்தான். மறுநாட் காலையில் போர்ப்பறை மீண்டும் வீரரைப் போருக்கு அழைத்தது. உடனே, அம் மங்கையின் கணவன் போருக்குக் கிளம்பினான்; அமர்க்களம் புகுந்து அரும்போர் புரிந்தான், செருக் களத்தில் உயிர் கொடுத்துப் புகழ்கொண்டான். பொழுது விடிந்தது. மறுபடியும் போர்ப்பறை, முழங்கிற்று. மங்கை எழுந்தாள்; தன் குழந்தையை அழைத்தாள்; அவன் தலையில் எண்ணெய் தடவிச் சீவினாள் வெளுத்து வைத்திருந்த ஆடையை விரித்து உடுத்தினாள்; வேலாயுதத்தைக் கையிலே கொடுத்து இளம் பாலனைப் போர்க்களத்திற்கு அனுப்பினாள். முதல் நாள் தமையன் இறந்தான் என்றும் தளராது, மறுநாள் கணவன் இறந்தான் என்றும் கலங்காது, தன் குடும்பத்திற்கு ஒரு மைந்தனே உள்ளான் என்றும் உணராது, இளம்பாலனைப் போருக்கு அனுப்பிய பெண்மணியின் வீரத்தை மாசாத்தியார் என்னும் பெண் புலவர் பாராட்டிப் பாடியுள்ளார். மற்றொரு வீரத்தாய் போர்க்களத்தில் தன் மகன் பகைவர்க்குப் புறங்காட்டி ஓடினான் என்று கேள்வியுற்றாள்; பொங்கி எழுந்தாள் கொடிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_விருந்து.pdf/25&oldid=878462" இலிருந்து மீள்விக்கப்பட்டது