பக்கம்:தமிழ் விருந்து.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 தமிழ் விருந்து பயினும் கொண்டு பாங்குறச் செய்யப்பட்ட ஆகாய விமானம் மயில் வடிவத்தி லமைந்திருந்தது. அவ் விமானத்தின் அழகு மன்னவன் மனத்தைக் கவர்ந்தது. விமானத்தை இயக்கும் பொறி வியக்கத் தக்கதாய் இருந்தது. அப் பொறியை வலப்பக்கத்தில் கை விரலால் மெல்ல அசைத்தால் விமானம் எழுந்து மேலே பறக்கும்; மேக மண்டலத்திற்கு மேலாகச் செல்லும். அப் பொறியை இடப்பக்கத்தில் அசைத்தால் விமானம் கீழே இறங்கிக் கால் குவித்துத் தரையிலே தங்கும். இத் தகைய மயில் விமானத்தை அம் மன்னன் முதலில் தன் மாளிகைப் பூந்தோட்டத்திலே இயக்கிப் பழகினான்; எளிதாக அவ் வானவூர்தி இயங்கும் தன்மையை அறிந்து, தன் காதல் மனைவிக்கும் அதை இயக்கும் முறையைக் கற்பித்தான். விமானத்தை முறுக்கி மேலே பறக்கவும், எளிதாக இறக்கவும் கற்றுக்கொண்ட அரசமாதேவி மாளிகையைச் சூழ்ந்த இடங்களிலும் பூங்கா வனத்திலும் அதன் மீது ஏறிச் சுற்றி இன்புற்றிருந்தாள். மாறுபட்ட அரசை யெல்லாம் முரித்து அழித்த மன்னவன், போர் ஒடுங்கியதென்று கவலை தீர்ந்தான்; அரசாங்க வேலைகளைத் தன் அமைச்சனிடம் ஒப்புவித்தான்; அவ்வமைச்சனை, "எனக்குயிர் என்னப் பட்டான் என்னலாற் பிறரை இல்லான் முனைத்திறன் முருக்கி முன்னே மொய்யமர் பலவும் வென்றான்" என்று புகழ்ந்தான். அமைச்சனிடம் அரசாங்க பாரத்தை இறக்கிய பின்பு அளவிலா மகிழ்ச்சியடைந்து அரசன் இன்ப நுகர்ச்சியில் ஈடுபட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_விருந்து.pdf/30&oldid=878472" இலிருந்து மீள்விக்கப்பட்டது