பக்கம்:தமிழ் விருந்து.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறநானூறு 45 "செல்வக் காலை நிற்பினும் அல்லற் காலை நில்லலன்" என் தோழன்" என்று அருகேயிருந்த அன்பரிடம் அகங் குழைந்து கூறினான். இங்ங்னம் ஏங்கி நின்ற உயிர் நீங்கிப்போயிற்று. சோழன் சொல்லிய வண்ணமே ஆந்தை வந்து சேர்ந்தார்; நிகழ்ந்ததை அறிந்தார்; தாமும் உண்ணாவிரதம் இருந்து, தம்முயிர்கொண்டு, சோழன் நல்லுயிரைத் தேடச் செல்பவர் போல, ஆவி துறந்தார். இவ்விருவரும் ஒன்றுபட்டு உணர்ச்சியின் பயனாகிய உயரிய நட்பிற்குச் சான்றாயினர். கலையறிந்த புலவர்களை அக் காலத்து மன்னரும் செல்வரும் மதித்தார்கள், கற்றோரைப் போற்றாத நாடு ஒரு நாளும் கடைத்தேற மாட்டாது என்னும் உண்மையை நன்றாக அறிந்திருந்தார்கள். சேரநாட்டை யாண்ட பெருஞ்சேரலை நாடிச் சென்றார், ஒரு தமிழ்ப் புலவர். அப்பொழுது மன்னன் மாளிகையில் இல்லை. நெடுந்துரம் நடந்து, வெயிலால் உலர்ந்து, பசியால் வருந்திய புலவர் அங்கிருந்த மெல்லிய மஞ்சத்தில் படுத்துறங்கிவிட்டார். சேரமான் வந்தான்; மஞ்சத்தில் உறங்கிய அறிஞரைக் கண்டு நெஞ்சம் குளிர்ந்தான். அவர் நன்றாக உறங்குமாறு வெண்சாமரம் எடுத்து வீசுவானாயினன். சேரன் உள்ளத்தில் அமைந்த தமிழார்வம் இதனால் தெள்ளிதின் விளங்குகின்ற தன்றோ? வாள் எடுத்து, மாற்றார் தலைகளை வீசிய கைகளால் சேரமான் புலவர்க்குச் சாமரம் வீசினான். தகடூர்க் கோட்டையைத் தகர்த்த சேரன், தமிழ்ப் புலமைக்குத் தாழ்ந்து பணி செய்வானாயினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_விருந்து.pdf/47&oldid=878507" இலிருந்து மீள்விக்கப்பட்டது