பக்கம்:தமிழ் விருந்து.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 தமிழ் விருந்து கொங்கு நாட்டிலே குமணன் என்னும் குறுநில மன்னன் ஒருவன் இருந்தான். அவன் புலவரது வறுமைக்குப் பெரும் பகைவன். தம்பியின் கொடு மையால் நாடிழந்து, தன்னந்தனியனாய்க் காட்டிலே மறைந்து வாழ்ந்த அம் மன்னனைத் தேடிக் கண்டுகொண்டார் ஒரு தமிழ்க் கவிஞர்; அவன் நிலைமையைச் சிறிதும் கருதாது தம் பாட்டைச் சொல்லத் தொடங்கினார். 'ஐயனே ! பலநாள் உணவின்றி, மனையாள் வற்றி ஒடுங்கிவிட்டாள். பாலற்ற கைக்குழந்தை பசியால் அழுது தாய் முகம் பார்க்கின்றது. தாய், கண்ணிர் நிறைந்த கண்களோடு என் முகம் பார்க்கின்றாள். ஏழையேன் என் செய்வேன்? உன் முகம் நோக்கி வந்தடைந்தேன்' என்று உருக்கமாகப் பாடினார். கவிஞர் பாடிய பாட்டைக் கேட்ட குமணன் பெருந் துயரம் உற்றான். நாடிழந்த பொழுது அடைந்த துன்பத்தினும், வாடிய புலவரது வறுமையை அறிந்த நிலையில் அவன் பெருந்துயரம் அடைந்தான். 'அந்த நாள் வந்திலை அருங்கவிப் புலவோய், இந்த நாள் வந்து நீ நொந்தெனை அடைந்தாய்' என்று சொல்லிக் கொண்டே தன் உடைவாளை எடுத்துப் புலவர் கையிற் கொடுத்து, 'இவ்வாளால் என் தலையை அரிந்து, நாடாளும் என் தம்பியிடம் கொடு. இத் தலைக்கு அங்கே விலையுண்டு. அவன் தரும் பொருளைப் பெற்று, வறுமையைப் போக்கிக் கொள்' என்று முகமலர்ந்து கூறினான். இவ்வாறு அறிஞர் ஒருவரைப் பற்றிய வறுமை கண்டு தரியாது தன் தலையையே கொடுக்க இசைந்த குமணனை ஈன்ற தமிழ் நாடு பெருமை வாய்ந்ததன்றோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_விருந்து.pdf/48&oldid=878509" இலிருந்து மீள்விக்கப்பட்டது