பக்கம்:தமிழ் விருந்து.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலப்பதிகாரம் 49 "இம்மைச் செய்தது மறுமைக்காம் எனும் அறவிலை வாணிகன் ஆய் அலன்' என்று அவன் மனப் பான்மையை ஒரு பாட்டு விளக்குகின்றது. பயன் கருதாது கொடுத்தான் அவ்வள்ளல். கைப்பொருளைக் கொடுத்து அறத்தை விலைக்கு வாங்கும் வணிகன் அவன் அல்லன். கொடுப்பது கடமை, முறைமை என்ற கருத்து ஒன்றே அவன் உள்ளத்தில் நின்றது என்று புலவர் வியந்து கூறுகின்றார். இத் தகைய செம்மனம் படைத்தவர் கோடியில் ஒருவர் என்று கூறவும் வேண்டுமோ? * . 7. சிலப்பதிகாரம் சேர நாட்டில் அரசு வீற்றிருந்த செங்குட்டுவன் ஒரு நாள் பெரியாற்றங்கரையின் மணற்பரப்பிலே உல்லாசமாகப் பொழுது போக்கிக் கொண்டிருந்தான். அம் மன்னன் தம்பியாகிய இளங்கோவும், மதுரைத் தமிழ்ப் புலவராகிய சாத்தனாரும் உடன் இருந்தார்கள். அப்பொழுது மலைநாட்டுக் குறவர்கள் திரண்டு போந்து, சேரனை மனமார வாழ்த்தி, 'மன்னர் மன்னா ! நினது மலைநாட்டில் என்றும் கண்டறியாத ஒரு காட்சியை இன்று கண்டோம். வாடிய முகத்தோடு, ஒரு மாது மலைமேல் ஏறி வேங்கை மரத்தின் கீழ் வந்து நின்றாள். ஒரு விமானம் விண்ணினின்றும் இறங்கிற்று. அவள் அவ் விமானத்திலேறி எம் கண் காண விண்ணுலகம் சென்றாள். அவள் எந்நாட்டாளோ? யார் மகளோ? அறியோம்' என்று கூறித் தொழுது நின்றார்கள். அது கேட்ட மன்னனும் இளங்கோவும் வியப்பும் திகைப்பும் உற்றார்கள். அந் நிலையில் மதுரைச் சாத்தனார், அரசே! அந் நல்லாள் வரலாற்றை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_விருந்து.pdf/51&oldid=878516" இலிருந்து மீள்விக்கப்பட்டது