பக்கம்:தமிழ் விருந்து.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 தமிழ் விருந்து நான் அறிவேன். அவள் சோழநாட்டுப் புகார் நகரத்திலே பிறந்தவள் கண்ணகி என்னும் பெயருடையாள் செல்வப் பெருங் குடியிற் பிறந்தும், முன்வினைப் பயனால் அவ்வூரை விட்டுத் தன் கணவனோடு மதுரையை அடைந்தாள். அங்கு அரண்மனைச் சிலம்பைக் களவாடிய கள்வன் என்று அரசன் ஆணையால் காவலாளர் அவள் கணவனைக் கொன்றார்கள். கணவனை யிழந்த மாது கொதித் தெழுந்து, பாண்டியன் முன்னே சென்று தன் கணவன் குற்றவாளியல்லன் என்று நிரூபித்தாள். அவள் சிற்றத்தால் மன்னனும் மடிந்தான், மதுரையும் எரிந்தது என்று சொல்லி முடித்தார். அக் கதையைக் கேட்ட இருவர் உள்ளமும் உருகின. கவியரசராகிய இளங்கோ அக் கதையின் மூலமாகச் சில சிறந்த உண்மைகளை உலகத்தார்க்கு உணர்த்தலாமே என்று எண்ணினார். நீதி தவறிய அரசரை அறமே ஒறுக்கும் என்பது ஒர் உண்மை. கற்புடைய மாதரை விண்ணுலகும் மண்ணுலகும் போற்றும் என்பது மற்றோர் உண்மை. வினையின் பயன் விளைந்தே தீரும் என்பது பிறிதோர் உண்மை. இம் மூன்று உண்மைகளும் கண்ணகியின் கதையில் அமைந்திருத்தலால், இளங்கோ அக் கதையைக்கொண்டு ஒரு காவியம் இயற்றக் கருதினார். “அரைசியல் பிழைத்தோர்க்கு அறம்கூற் றாவது உம் உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும் ஊழ்வினை உருத்துவந் தூட்டும் என்பது உம் சூழ்வினைச் சிலம்பு காரண மாக நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_விருந்து.pdf/52&oldid=878518" இலிருந்து மீள்விக்கப்பட்டது