பக்கம்:தமிழ் விருந்து.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலப்பதிகாரம் 53 என்று வேண்டிக்கொண்டார். எனவே, மூன்று தமிழ் நாட்டின் தன்மையும், மூன்று முடிமன்னர் செம்மையும் ஒருங்கே சிலப்பதிகாரத்திற் காணலாம். மேலும் இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழின் சிறப்பையும் சிலப்பதிகாரத்தால் அறியலாம். செஞ்சொற் களஞ்சியமாகிய அக் காவியத்தில் சிந்தைக்கினிய செவ்விய தமிழ் நடையுண்டு; செவிக்கினிய இசைப் பாடு உண்டு; கண்ணுக்கினிய கூத்துண்டு. ஆகவே, முத்தமிழ் இன்பம் நுகர விரும்பும் வித்தகர்க்குச் சிலப்பதிகாரமே சிறந்த விருந்தாகும். இன்னும் எக் காலத்திற்கும் எந் நாட்டிற்கும் பொதுவாகிய மாதர் கற்பும், மன்னர் நீதியும் சிலப்பதிகாரத்தில் நன்கு விளக்கப்படுகின்றன. "பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பெனும் திண்மையுண் டாகப் பெறின்” என்று திருவள்ளுவர் அருளிய உண்மைக்குச் சிலப்பதிகாரமே சிறந்த சான்று. கற்பெனும் திண்மையே கண்ணகியின் வடிவம். அவ் வீரவடிவமே சேரன் செங்குட்டுவன் உள்ளத்தைக் கவர்ந்தது. கண்ணகிக்கு வீரக்கல் நாட்டி வழிபட விரும்பினான் சேரன்; விண்ணளாவிய இமயமலையிற் போந்து சிலை எடுத்தான்; கங்கையாற்றில் நீராட்டினான்; தலை நகராகிய வஞ்சி மாநகரத்தில் கொண்டுவந்து அச் சிலையை நிறுவித் திருவிழாக் கொண்டாடினான். அத் திருவிழாவைக் காண வந்திருந்த பிறநாட்டுப் பெருவேந்தர், தம் நாடுகளிலும் பத்தினித் தெய்வத்தை வழிபடத் தொடங்கினார்கள். இவ்வாறு, பத்தினி வழிபாடு பாரதநாட்டிற் பரவியது. "கற்புக்கடம் பூண்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_விருந்து.pdf/55&oldid=878524" இலிருந்து மீள்விக்கப்பட்டது