பக்கம்:தமிழ் விருந்து.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாட்டாரும் அயல் நாட்டாரும் 79 போது கலிங்க நாட்டார் மனங்கலங்கினர், ஐயோ ! அருவர் படை எடுத்து வந்து விட்டாரே " என்று அரற்றினர். "ஒருவர் ஒருவரின் ஓட முந்தினர் அருவர் அருவர்னனா இறைஞ்சினர் அபயம் அபயம் எனா நடுங்கியே” என்று அவர் பட்ட பாட்டைக் கலிங்கத்துப்பரணி கூறுகின்றது. கலிங்கத்தில் நிகழ்ந்த கடும்போரைப் பற்றி மற்றொரு பழம்பாட்டும் உண்டு. "ஒருவர் ஒருவர்மேல் வீழ்ந்து வடவர் அருவர் அருவரென அஞ்சி-வெருவந்து தீத்தீத்தீ என்றயர்வார் சென்னி படைவீரர் போர்க்கலிங்க மீதெழுந்த போது” என்பது அப் பாட்டு. சோழநாட்டுப் போர் வீரரைக் கண்டபோது, 'அருவர் அருவர் என்று அலறி அடித்துக்கொண்டு, ஒருவர் மேல் ஒருவர் விழுந்து கலிங்க நாட்டார் ஓடினர் என்பது இப்பாட்டினால் அறியப்படுகிறது. இக் கலிங்கத்தைக் குறித்து இன்னும் அறியத்தக்க செய்திகள் இரண்டொன்று உண்டு. கடற்கரை யோரமாக அமைந்தது கலிங்க நாடு. இந் நாட்டினின்றும் கலிங்கர் பலர் கடல் கடந்து பிற நாடுகளிற் குடியேறி வாழ்ந்தார்கள். மலாய், சிங்கப்பூர் முதலிய நாடுகளிற் குடியேறிய கலிங்கரை அந் நாட்டார் 'கிளிங்கர் என்றழைத்தார்கள். நாளடைவில் கிளிங்கர் என்பது அங்குக் குடியேறிய இந்தியருக் கெல்லாம் பொதுப் பெயராயிற்று. இன்று சிங்கப்பூரில் வாழும் தமிழர்க்கும் கிளிங்கர் என்பதே பெயர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_விருந்து.pdf/81&oldid=878580" இலிருந்து மீள்விக்கப்பட்டது