பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/10

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

கண்டறியும் சுவைமிக்க சீரிய முயற்சியாக ‘தம்பிக்குக் கடிதம்’ எனும் இப்பகுதியைத் துவக்கினேன்—வளர்ந்தது—களிப்புமிகக் கொண்டேன்—உன் மகிழ்ச்சியையும் நான் அறிவேன்.

ஆனால்...?—ஆனால் என்ன அண்ணா! நான் இதழ் பெற மறுத்தேனா? இன்முகம் காட்டத் தவறினேனா? ஒரு கிழமை மடல் வரத் தவறினாலும், ஏன் வரவில்லை? ஏன் வரவில்லை? என்று ஆவலுடன் கேட்காதிருந்தேனா? ஆனால் என்ற ஆபத்தான வார்த்தையைப் போடுகிறாயே! என் மீதா தவறு இருக்கிறது?—என்று, தம்பி! கேட்கத் துடிக்கிறாய், உணர்கிறேன்; ஆனால், அந்தக் கேள்வியுடன் கோபத்தை அல்ல, கனிவினைத்தான் கலந்து தருகிறாய்—என்னிடம் ஒப்படைக்கப் பட்டுள்ள ஓராயிரம் தொல்லைகள் நிரம்பிய பணியினைக் குறித்து உனக்கே தெரியுமே. கடுமையான பணியாற்றுவதற்கு இடையிலேயும், உனக்கு மடல் எழுதவும், கதை, கட்டுரை, உரையாடல் போன்ற வடிவங்களில் என் எண்ணங்களை வெளியிடவும் நான் தயங்கினதுமில்லை—அஃது எனக்குப் பளுவான வேலையாகவும் தோன்றினதில்லை— சொல்லப்போனால், மனத்திலே ஏற்பட்டு விடும் சுமையும், அதனாலேற்படும் சோர்வும்,உனக்காக எழுதும்போது பெருமளவு குறைந்து போவதுடன், புதிய தெம்பும் பிறந்திடுகிறது — ஆகவே இடையில், இதழ் நிறுத்தப் பட்டதற்குக் காரணம், எனக்கு எழுத நேரமும் நினைப்பும் கிடைக்கவில்லை என்பதுமல்ல, எழுதுவதால் களைப்பும் இளைப்பும் ஏற்பட்டுவிட்டது என்பதுமல்ல. இதழ் நடத்தும் நிர்வாகப் பொறுப்பினைப் பார்த்துக்கொள்ள, முட்டுப்பாடின்றி நடத்திச்செல்ல எனக்கு நேரம் கிடைக்காததும், அதன் காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியுமே, திராவிட நாடு இதழ் நிறுத்தப்பட்டதற்குக் காரணம். எனக்கு மட்டுமே தொல்லை தந்த நிலைமைகளைப் பற்றித் தம்பி! உன்னிடம் சொல்லி, உன் மனத்துக்குச் சங்கடத்தை உண்டாக்க விரும்பவில்லை; பல்வேறு காரணங்களால், ‘திராவிட நாடு’ நிறுத்தப்பட்டது; பல திங்களாகிவிட்டதால், ‘திராவிட நாடு’ என்ற பெயருடன் இதழ் நடத்தத் துரைத்தனம் அளித்திருந்த அனுமதி காலாவதி ஆகிவிட்டது. மீண்டும் அதே பெயருடன் இதழ் நடத்தத் துரைத்தனத்தாரை அணுகும் முயற்சி நடைபெற்றவண்ணம் இருக்கிறது—நண்பர்