93
ஒரு ஆளுங்கட்சி, எதிர்க் கட்சிகளிடமிருந்து ‘இடித்துரை’ கேட்பது சகஜம்; ஆனால், பிரதம நீதிபதி எனும் மிக உன்னதமான நிலையில் இருந்தவர்—மனம் நொந்து—ஆளுங்கட்சிக்குத் துணிந்து புத்திமதி கூறுவது என்றால், உள்ளபடி அது வியந்து கவனிக்கத் தக்கதாகும்.
எல்லை கடந்துவிட்டது, இனி நமக்கென்ன என்று நம்போன்றவர்கள் இருந்துவிடக்கூடாது, மக்களுக்கு உண்மை நிலைமையை உணர்த்தியாக வேண்டும் என்ற அக்கறையுடன் அவர் ஆளுங்கட்சியை இத்தனை பச்சையாகக் கண்டித்துள்ளார்.
டாட்டாக்கள், பிர்லாக்கள், சிங்கேனியாக்கள், போன்றாரிடம் பணம் பெறுவது ஒருவிதத்தில் இலஞ்சமே! என்று கூறியிருக்கிறார்.
எதிர்க்கட்சிகள், காங்கிரசுக்கும் முதலாளிகளுக்கும் உள்ள ‘பந்தபாசத்தை’ எடுத்துக்காட்டிடும்போது, கவனிக்க மறுத்திடும் போக்கினர்கூட, எந்தவிதமான அரசியல், கட்சி நோக்குமற்ற முன்னாள் பிரதம நீதிபதி, நொந்த மனத்துடன், துணிந்து, காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் போக்கை அம்பலப்படுத்தி, அந்தப் போக்கைப் போக்கிக் கொள்ளாமல், சமிதிவைத்து இலஞ்சப் பேயை ஒழிப்பேன் என்று நந்தா கூறுவது வெறும் கேலிக் கூத்தாகிப் போகும் என்று கூறியுள்ளதை அலட்சியப் படுத்த மாட்டார்கள் என்று எண்ணுகிறேன். தம்பி! அவர் எடுத்துரைத்தவைகளைப் பொதுமக்கள் அறியும் படிச் செய்திடவேண்டிய பொறுப்பு உன்னுடையது. உன்னால் முடியும்.
தேர்தலில் வெற்றிபெறப் பெரும் பணத்தை முதலாளிகளிடம் பெற்றுக்கொண்டால், பணம் கொடுத்த முதலாளிகள், ஒன்றுக்குப் பத்தாக, கொள்ளை இலாபமடித்திடாமல் வேறு என்ன செய்வார்கள்! கொள்ளை இலாபம் பெற, குறுக்குவழி சென்றாக வேண்டிவருகிறது. குறுக்குவழி செல்லும்போது, சட்டம் குறுக்கிட்டாலும், அதிகாரிகள் தடுத்திட்டாலும், காங்கிரஸ் அமைச்சர்களின் நண்பர்கள் என்ற ‘கவசம்’ இவர்களுக்கு எந்தவிதமான தொல்லையும் ஆபத்தும் வரவிடாமல் பாதுகாப்பு அளிக்கிறது. இலஞ்சமும் ஊழலும் வளராமலிருக்க முடியுமா?