பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/119

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

111

எதை வேண்டுமானாலும் சொல்லிவைக்கலாம் என்று உங்கள் அண்ணாதுரை இப்படிச் சொல்கிறானே, நாலும் நாலும் எட்டு என்பதைக்கூட சொல்லிக் கொடுக்கத் தெரியாத ஆசிரியரும் இருப்பாரா! பொருத்தம் இருக்கிறதா அவன்பேச்சில்—பொருள் இருக்கிறதா அவன் தரும் உதாரணத்தில் என்றெல்லாம், நம்மைப் பிடிக்காதவர்கள் கூறத் துடித்திடுவர்; சொல்லிவிடு தம்பி! அவர்கட்கு, அவர்கள் சல்லடம் கட்டுமுன்பே! அப்படி ஒரு பள்ளிக்கூடம் இல்லை! ஆனால் அப்படி ஒரு பள்ளிக்கூடம் இருந்தால் எவ்வளவு வேதனை நிரம்பிய விசித்திரம் தெரியுமோ, அது தெரிகிறது ஆளுங்கட்சியான காங்கிரசில் ஒரே பிரச்சினை பற்றி வெவ்வேறு தலைவர்கள் வெளியிடும் மாறுபாடான கருத்துக்களைக் கவனிக்கும்போது.

எடுத்துக்காட்டுக்கு ஒன்று கூறுகிறேன்.

இன்று விலைகள் ஏறிவிடடதற்குக் காரணம் உற்பத்திக் குறைவுதான்.

என்கிறார் ஒரு காங்கிரஸ் தலைவர்! பெரிய தலைவர் தான்!!

வணிகர்களின் இலாபவேட்டையால் ஏழைகள் கொடுமைப்படுததப்படுகிறார்கள் என்று வீரமாகப் பேசிய உணவு அமைச்சர் சுப்பிரமணியமே,

நிரந்தரமான பரிகாரம் உணவுப் பொருள் உற்பத்தி அதிகமாவதிலேயே இருக்கிறது.

என்று பேசுகிறார்—பேசத் தலைப்பட்டிருக்கிறார்.

சே! சே! சே! விலைகள் ஏறிக்கொண்டிருப்பது உற்பத்தி பெருகாததாலா? யார் சொல்வது அப்படி! பைத்தியக்காரத்தனமான பேச்சு! உற்பத்தி பெருகி இருக்கிறது, சந்தேகமே இல்லை. ஆனால், உற்பத்தியான உணவுப் பொருள் சந்தைக்கு வருவதிலே, வேண்டுமென்றே தாமதம், விநியோக முறையில் குறை ஏற்பட்டுவிடுகிறது—ஏற்படுத்தி விடுகிறார்கள் பண முதலைகள்—

என்று பேசுகிறார் மற்றொருவர். இவரும் பெரிய காங்கிரஸ் தலைவர்—கிருஷ்ணமேனன், தம்பி! ஒரு காலத்தில், ‘நேருவின் வாரிசு’ என்று கொண்டாடப்பட்டு வந்தவர்—