பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/123

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

115

சதாசர் சமிதியா! அதிலே இலஞ்சப் பேர்வழிகள் நுழைந்து கொண்டுள்ளனராமே! போலீஸ்படை இருக்க எதற்காக இந்தக் காவிப்படை என்று கடுங்கோபத்துடன் கேட்கிறார், வங்கநாட்டுக் காங்கிரஸ் தலைவர் (அடுத்து அகில இந்தியக் காங்கிரசின் தலைவராகப் போகிறவராம்) அடுல்யா கோஷ்.

காமராஜ் திட்டம் கவைக்குதவாது என்கிறார் ஒருவர், அதுதான் கைகண்ட மருந்து என்கிறார் மற்றொருவர்.

தம்பி! இப்போது யோசித்துப் பார்க்கச் சொல்லு, நாலும் நாலும் ஏழு என்று ஒரு ஆசிரியரும், ஒன்பது என்று மற்றொருவரும், கூட்டுவது பிறகு பார்ப்போம், முதலில் நாலு என்றால் என்ன? எவ்வளவு? அதைத் தீர்மானிப்போம் என்று வேறொருவரும் பேசிடும் பள்ளிக் கூடம்போல இருக்கிறதல்லவா !! தம்பி, அத்தனை பெரியவர்கள் கூடிப் பேசிய இடத்தைப் பள்ளிக்கூடம் என்று சொல்வதா என்று கோபித்துக்கொள்ள எவரேனும் கிளம்பினால், நமக்கேன் வீண்பகை—பள்ளிக்கூடம் என்பதை மாற்றி அவர்களுடைய நிலையின் உயர்வுக்கு ஏற்ற வேறு பெயரளித்துவிடுவோம்—கல்லூரி என்று கூறுவோமே—குழப்பக் கல்லூரி என்று பெயரிடுவோம்.

அட பைத்தியக்காரா! இதைப்போய்க் குழப்பம் என்கிறாயே! இதுதான் கருத்துப் பரிமாறிக்கொள்ளுதல்! இது தான் ஜனநாயகம்! பேச்சு உரிமை! எவரும் தமது மனத்துக்குச் சரியென்று பட்டதை அச்சம், தயை தாட்சணியமின்றி எடுத்துக்கூறிடும் உரிமை. இது வழங்கப்படுவது எமது ஸ்தாபனமாம் காங்கிரசிலேதான்! இதன் அருமை பெருமையைத் தெரிந்துகொள்ள இயலாமல், இதனைக் குழப்பம் என்று பேசுகிறாய், குறை இது என்று ஏசுகிறாய்! ஒரு ஜனநாயக அமைப்பிலே இதுதான் அழகு! என்று கூற முற்படுவர், தெரியும்.

ஆனால், தம்பி! நாலும் நாலும் எட்டு என்பது போன்ற அடிப்படையிலே ஆளுக்கொரு பேச்சுப் பேசுவது, ஜனநாயகமாகாது-கருத்துக் குழப்பத்தைத்தான் காட்டும்; கொள்கைக் குழப்பத்தைத்தான் காட்டும்.

இன்று காங்கிரசிலே திட்டவட்டமான கருத்துக் கொண்டு எல்லோரும் ஈடுபட்டு இல்லை. பணபலம்,