பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/124

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பதவிபலம், விளம்பரபலம் மிகுதியாக உள்ளது என்ற காரணத்தால், அதிலே புகுந்துகொண்டு அதிகாரம் பெறலாம், ஆதாயம் பெறலாம் என்ற நோக்கத்துடன் எவரெவரோ சேர்ந்துவிட்டனர்—ஒரே கட்சி என்று ஒப்புக்குக் கூறிக்கொள்கின்றனரேயொழிய—அடிப்படைப் பிரச்சினைகளிலேயே வெவ்வேறு கருத்துகளை, முரண்பாடான கருத்துகளைக் கொண்டவர்கள்—ஒட்ட முடியாதவர்கள்—வெட்டிக்கொண்டு போகவேண்டியவர்கள்—உள்ளனர். உற்பத்தியாளர்களின் சார்பில் பேசுகிறேன் என்று நிலத்திமிங்கலங்களுக்காக வாதிடுபவர்களும் உள்ளனர் காங்கிரசில்; விநியோகமுறை செப்பனிடப்பட வேண்டும் என்ற சமதர்மக் கருத்தினரும் உள்ளனர் அதே காங்கிரசில். முரண்பாடுகளை மூடி மறைத்து வைத்துக்கொண்டு எவரெவருக்கு எந்தெந்தச் சமயத்தில், எந்தெந்த இடத்தில் வாய்ப்புக் கிடைக்கிறதோ, ஆங்கு தமது கருத்தினைச் செயல்படுத்திப் பயன் பெறுகின்றார்.

எனவேதான் தாமதம், தெளிவின்மை, துணிவின்மை, திரித்திடுதல் எனும் கேடுகள் காங்கிரஸ் மேற்கொள்ளும் திட்டங்களிலும், இயற்றும் சட்டங்களிலும் நெளிகின்றன.

இத்தனை முரண்பாடுகளையும் கவனித்து, எந்தக் கருத்தினரையும் இழந்திட மனமில்லாததால், அவரவரும் என் கருத்தும் இதிலே இருக்கிறது, என் நோக்கமும் இதிலே ஈடேறுகிறது என்று மகிழ்ச்சி கொண்டிடத்தக்க விதமாக, கலப்படமான முறையிலே சட்டம் ஏட்டிலே ஏறுகிறது—பெருந் தாமதத்துக்குப் பிறகு.

சட்டம்—திட்டவட்டமற்று, தெளிவற்று அமைந்து விடுகிறது. வழக்கு மன்றத்திற்குப் பெருவிருந்து கிடைக்கிறது.

சட்டம் செயல்படத் தொடங்கும்போது மேலும் இடர்ப்பாடுகள் எழுகின்றன—திரித்துவிட வழி கிடைப்பதால், சட்டத்தினால் கிடைத்திட வேண்டிய முழுப் பலனும் கிடைத்திடுவதில்லை. ஏட்டிலே முற்போக்கான சட்டம் இருந்தும் நாட்டிலே அதற்கேற்ற பலன் கிடைக்காமலிருப்பது இதனால்தான்.

பொதுப்படையாகப் பேசினால் சிலருக்குப் புரிவது கடினம் என்றால், தம்பி! காங்கிரஸ் அரசு இயற்றியுள்ள