பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/126

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

உழுபவனுக்கு நிலமாம்
உழுபவனுக்கு நிலம்!
இருப்பவனுக்கு வீடு!
ஏறுபவனுக்கு ரயில்!

இப்படிக் கேலி பேசினவர் தான் காமராஜர். இறுதிவரையில் எதிர்த்துப் பார்த்து, எவ்வளவு தாமதம் ஏற்படுத்தலாமோ அவ்வளவும் செய்து பார்த்து, கடைசியில், ஏராளமான விதி விலக்குகள் வைத்து, இந்த நிலச் சீர்திருத்தச் சட்டத்தைச் செய்தனர். இந்த விதி விலக்குகளைக் காரணமாகக் கொண்டு, நிலப் பிரபுக்கள், தமது ஆதீனத்திலிருந்த நிலத்தைப் பிரித்துப் பிரித்து பல்வேறு காரியங்களுக்காக என்ற பெயரால்—கோயில் கட்டளை என்பதிலிருந்து கல்லூரி நடத்துவது என்பது வரையில் பல பெயரால்—எழுதிவைத்துவிட்டு, சட்டத்தால் தங்கள் ஆதிக்கம் எந்தவிதத்திலும் பாதிக்கப்படாதபடி தம்மைப் பாதுகாத்துக் கொண்டனர்—காங்கிரஸ் அரசின் துணை கொண்டு. சட்டம் ஒரு கேலிக் கூத்தாக்கப்பட்டுப் போயிற்று.

எவரொருவரிடமும் இவ்வளவுக்கு மேல் நிலம் இருக்கக்கூடாது என்ற ஒரு சட்டம் அமுலுக்கு வந்திடுவதால், ஏற்படக்கூடிய புரட்சிகர மாறுதல், இங்கே ஏற்படாமல் போனதற்குக் காரணம் இதுவே.

மீண்டும் அந்தச் சட்டத்தின் ஓட்டைகளை அடைத்திடவும், உருப்படியான பலன் கிடைக்கத்தக்க விதமாகச் செயல்படுத்தவும், விதிவிலக்குகளை நீக்கிடவும், போலி ஏற்பாடுகளை உடைத்திடவும், முற்போக்காளர் ஆட்சியில் அமர்ந்து எங்கே செய்துவிடுவார்களோ என்ற அச்சத்தின் காரணமாகவே, இத்தனை பக்குவமாக நமது நலனைப் பாதுகாத்து வரும் காங்கிரஸ் கட்சியே ஆட்சியில் நீடித்து இருக்கவேண்டும் என்ற நோக்கத்துடன், நிலப்பிரபுக்கள் காங்கிரசில் இடம் பிடித்துக்கொண்டு, ஊட்டம் கொடுத்துக்கொண்டு வருகின்றனர்.

நிலச்சீர்திருத்தச் சட்டம் பயனற்றுப் போய்விட்டது என்பதனைக் காங்கிரஸ் அரசின் அழைப்பின் பேரில் இங்கு வந்து நிலைமைகளைக் கண்டறிந்த அமெரிக்க ஆய்வாளர்களே கூறிவிட்டனர்.

சட்டம் ஓட்டைகள் நிரம்பியதாக இருக்கிறது.