பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/152

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

144

சன்யாசிகளின் சன்மார்க்கக் கூடங்களே என்று ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு, அவர்களிடம் பயபக்தியுடன் நடந்துகொண்டு வந்தவரின், கண்டுபிடிப்பு, நான் குறிப்பிடுவது. குப்பை கூளங்களைக் கிளறி இந்த நாட்டு மதத்தை இழிவுபடுத்த வேண்டும் புனிதத் தன்மையைப் பாழாக்க வேண்டும் என்ற கெடுமதி கொண்டவரின் கலகப் பேச்சல்ல—இந்து மார்க்கத்தைத் தழுவிக்கொண்டு எல்லையிலாப் பரம் பொருளைக் கண்டிட ஏங்கித் தவித்திட்ட ஓர் அம்மையாரின் மனக் குமுறல் நான் குறிப்பிடுவது. அமெரிக்க நாட்டிலிருந்து இங்கு வந்த மேயோ அல்ல—பிரிட்டிஷ் நாட்டிலிருந்து இங்கு வந்து, இந்த நாட்டைத் தாயகமாக்கிக் கொண்டு, பேரையும் வாழ்க்கை முறையையும் மாற்றிக் கொண்ட ஓர் மாதரசியின் கண்டன உரை. போன மாதக் கப்பலில் வந்து இறங்கிப் பத்து நாள் நாட்டைச் சுற்றிப் பார்த்துவிட்டு, சீமை திரும்பிச் சென்று அரைகுறை அறிவினைக் காட்டிக் கொள்ளும் அவசரப் புத்திக்காரரின் அகம்பாவப் பேச்சு அல்ல. மீராபென் என்று தன் பெயரை மாற்றிக்கொண்டு, ‘இந்தியக் கோலத்தை’ப் பெற்றுக்கொண்டு, மகாத்மா காந்தியின் ‘சிஷ்யை’ ஆகி, அவருடைய ஆசிரமத்தில் இடம்பெற்று, ‘ஆத்ம சக்தி’யின் அருமையினை உணர்ந்து, அதற்கேற்றபடி தமது வாழ்க்கையினை ஒழுங்குபடுத்திக் கொண்ட உத்தமி என்று காங்கிரசின் பெருந்தலைவர்கள் கொண்டாடி வந்த அம்மையாரின் கொதித்த உள்ளத்தில் இருந்து கிளம்பிய சொற்கள். சாது சன்னியாசிகளிடம் சர்வேசனைக் கண்டறியும் ‘பரம இரகசியம்’ இருக்கிறது, அவர்களின் உபதேசம் கேட்டு உயர்ந்திடலாம் என்று மீராபென், சாதுக்களைக் கண்டு வழிபடலானார். திருத்தலங்கள் பலவற்றிலே இருந்து வந்த சாதுக்களைத் தரிசித்தார்—ஜென்ம சாபல்யம் ஆகவேண்டும் என்பதற்காக. ஆனால் என்ன கண்டறிந்து கொண்டார்? அவரே கூறட்டும், தம்பி!

“1947ம் ஆண்டிலிருந்து 1950ம் ஆண்டுவரை, ரிஷிகேசத்துக்கு அருகிலுள்ள பசுலோக் எனும் இடத்தில் இருந்து வந்தபோது, சாதுக்கள் பிரச்சினையிலே உள்ள அசங்கியம் அவ்வளவையும் கண்டறிய வேண்டி வந்தது.

என் காதுக்கு எட்டிய விஷயங்களைக் கேட்டு நான் திடுக்கிடலானேன். தீர விசாரித்தறிவது என்