பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/157

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

149

என்றெண்ணி, மகிழ்வுதனைப் பெற்றுத் திகழ்தல் இயற்கை; பொருத்தமும்கூட.

நிறைவாழ்வு. கனிச்சுவை போன்றுளது; அதனை நித்தநித்தம் பெற்றிடும் வாய்ப்புக் கிடைக்கப் பெறாதோரும். இன்றோர்நாள், எழில் மாளிகைதனை எட்டிப் பார்த்துக் களிப்படையும் ‘இல்லாதான்’ போல, இன்ன விதமெல்லாம் இருந்திட்டால், வாழ்வு சிறந்திடும், பயன் மிகுந்திடும், நாடு பொலிவு பெறும், வையகம் கண்டு பெருமைப்படும் என்று எவரும் எண்ணி மகிழத்தக்க இன்பநாள்.

இந்நாளில், தமிழ் மரபறிந்த எவரும், அறிதுயிலிலிருந்தபடி அண்டந்தனைக் காக்கும் அரி தங்கும் வைகுந்தமும், ஆடுவதில் வல்லவர் யார்! அறிந்திடுவோம் வந்திடு! என்று உமைதனை அழைத்து, மானாட மழுவாட முக்திக்கு வழிதேடும் பக்தர்கள் மனமாட ஆடிடும் சிவனாரின் கைலையும், இவளழகா அவளழகா? எவள் இன்று எம்முனிவன் தவம் கலைக்க? என்று தேவர் பேசிப் பொழுதோட்டும் இந்திரபுரியும் பிறவும்பற்றிப் பேசிடுவது மில்லை, எண்ணமும் கொள்வதில்லை.

தாள ஒலி அல்ல, தையலரின் சிலம்பு இசைக்கும் ஒலி தன்னோடு போட்டியிட்டு, கட்டழகி பெற்றெடுத்த இன்ப வடிவத்தை எடுத்தணைத்து, முத்தமிடும் இளைஞன் எழுப்பிவிடும் இச்சொலிக்கும் போட்டி எழ, கண்டு கருத்தறிந்து. பண்டு நடந்ததனை எண்ணி எண்ணிப் பாட்டன் சிரித்திட, இடையே விக்கல் இருமல் கிளப்பி விடும் ஒலியும், இன்னோரன்ன ஒலியே, இசையாகிடக் காண்கின்றோம் இத்திருநாளில்.

இந்த யுகந்தினிலே, இந்தத் தேசந்தன்னில், இன்ன குலத்தினிலே அவதரித்த மன்னவனும், அவனைக் கெடுக்க வந்த அசுரனும் போரிட்டபோது, மன்னவன் முற்பிறப்பில் மாதவம் செய்தான் எனவே அன்னவனை ரட்சித்து அசுரனைக் கொன்றிடுதல் முறை என்று, திருமாலும் ‘சக்கரத்தை’ அனுப்பிவைக்க, வந்தேன்! வந்தேன்! என்று துந்துபி என முழக்கி, வந்ததுகாண் திகிரி, அழிந்தான் அசுரன்; அந்தநாள், இந்நாள்; பண்டிகை நாள்! இந்நாளில், பாகும் பருப்பும் பாலினிற் பெய்து பக்குவமாய்ச் சமைத்து, சக்கர வடிவமாக்கி,