பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/158

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150

உண்டு உருசிபெறுவதுடன் உத்தமர்க்குத் ‘தானமாக’த் தருவோர்கள் அடுத்த பிறவியிலே அரசபோகம் பெறுவார்கள். அத்திரி அருளியது அதிகிரந்தமொன்று, அதிலிருந்து பிரித்தெழுதி அளித்திட்டார் மாமுனிவர், அவர் வழியில் வந்தவரே இன்று புராணம் படிப்பவரும், என்றெல்லாம் கதைத்திடும் நாள் அல்ல. வலிந்து சிலர் இதற்கும் கதை கூற முனைந்தாலும், எவர்க்கும் அஃது இனிப்பதில்லை; நெஞ்சில் புகுவதில்லை; இஃது பொங்கற் புதுநாள்! தமிழர் திருநாள்! அறுவடை விழா! உழைப்பின் பெருமையை உணர்ந்து நடாத்தப்படும் நன்றி அறிவிப்பு விழா! என்ற இந்த எண்ணமே மேலோங்கி நிற்கிறது; பெருமிதம் தருகிறது; மகிழ்ச்சி பொங்கி வழிகிறது; அகமும் முகமும் மலருகின்றன; வாழ்வின் பொலிவு துலங்கித் தெரிகிறது.

இந்த உலகத்தின் எழில் யாவும் பொய்யல்ல, மெய்! மெய்! எனும் உணர்வும், அந்த எழிலினையும் பயன்தனையும் நுகர்ந்திடவும் வளர்த்திடவும் முனைதல் மாந்தர் கடன் என்ற மெய்யறிவும், அந்தக் கடமையினைச் செம்மையாய்ச்செய்து முடிக்க ஆற்றல் மிகவேண்டும், அவ்வாற்றல் கூட்டு முயற்சியினால் மிகுந்து சிறப்பெய்தும் என்றதோர் நல்லறிவும், இருள் நீங்கி ஒளி காண்போர் இதயம் மலராகி இன்புற்றிருப்பது போல், நல்வாழ்வுதனைக் குலைக்கும் நச்சரவு போன்ற நினைப்புகளும், நிலைமைகளும், நிகண்டுகளும் அமைப்புகளும் நீடித்திருக்கவிடல் நன்றல்ல, நலம் மாய்க்கும் என்பதறிந்து, அறிவுக் கதிரினையே எங்கெங்கும் பரவச்செய்து எல்லோரும் இன்புற்று வாழ்ந்திடலே இயற்கை நீதி எனக் கொண்டு பணிபுரியும் ஆர்வமும், பெற்றிடப் பயன்படும் இந்தப் பொங்கற் புதுநாள்.

இயற்கைச் செல்வங்கள் என்னென்ன இங்குண்டு, அவை தம்மைப் புத்துலக நுண்ணறிவால் மேலும் பயன் அளிக்கும் விதமாக, திருத்தி அமைத்திட என்னென்ன முறை உண்டு என்பதெல்லாம் எண்ணி எண்ணி மகிழ்ந்திடலாம். இந்நாள் நமக்களிக்கும் நற்கருத்தைப் புரிந்து கெண்டால். புனலாடி, பொன்னார் இழை அணிந்து, பொட்டிட்டுப் பூமுடித்து, பாற்பொங்கல் சமைத்து அதில் பாகுகலந்து, பாளைச் சிரிப்புடனே பரிவுமிக்காள் தந்திட, சுவைத்திட இதழிருக்க வேறு தரும் விந்தைதான் எதுக்கோ என்று கேட்டிட இயலாமல் குறும்புப் பார்வையினால்