பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/160

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

152

கிறது? வா! வா! என்று வாயால் அல்ல, சிறு கரத்தால் அழைத்திடும் குழவி காண்போன் களித்திடுவது போலத்தான், முற்றிய கதிர் நிரம்பிய வயலின் ஓரத்தில் சென்றிடும் உழவனுக்குக் காற்றால் அசைந்தாடும் பயிர் மகிழ்ச்சி அளிக்கிறது. அந்தி நேரத்துச் செவ்வானத்தைக் கண்ட துண்டா? கண்டிருப்பாயே! எப்படி அந்த அழகு? உன்னைப்போய்க் கேட்கிறேனே! உன்னை முதன் முதலாகக் கண்டபோது உனக்கு வாய்த்தவளின் முகம் வெட்கத்தால் சிவந்திருக்குமே, நீ அதை அல்லவோ எண்ணிக் கொண்டிருக்கிறாய்!! இருப்பினும் இதனைக் கேட்டிடு தம்பி! எழிலோவியம் நிரம்ப உளது நம்மைச் சுற்றி! ஒவ்வொன்றிலும் ஒவ்வோர் வகையான அழகு ததும்புகிறது. ஆனால் அந்தப் புறத்தழகு மட்டுந்தான், அவை நமக்களித்திடுகின்றன என்றால், அவை பெருமைக்குரியனவாகா. புறத்தழகு காட்டி நமை மகிழ்விப்பதுடன், அவை, தமது தன்மையின் காரணமாக நமக்கு மிகுந்த பயனையும் வழங்குகின்றன! நம் வாழ்வு சிறப்படைய அவை துணைசெய்கின்றன! சிறப்படையவா!! வாழ்வே, அவை நமக்கு வழங்கிடுகின்றன.

வானத்திலே தோன்றிடும் வண்ணக் குழம்பு, காணற்கரியதோர் ஓவியம்; ஆமாம்; ஆனால், கண்ணுக்காக மட்டுமோ அஃது உளது? இல்லை, தம்பி! கருத்துக்காக! என் அழகைக் கண்டிடு, இதயம் மலர்ந்திடும்! என்று மட்டும் கூறி, மையல் ஊட்டிடும் ‘சாகசக்காரி’ அல்ல, இயற்கையாள்! என்னைக் கண்டிடு, அறிந்திடு, முழுவதும் உணர்ந்திடு, என் தன்மையினை ஆய்ந்து பார்த்திடு, பயன் பெறு!!—என்று கூறிடும் வள்ளல் அந்த வனிதை!

இயற்கையாள் நமக்களித்த எண்ணற்ற பொருள்கள் பெற்றோம்; இன்றவை மனையில் மங்கலம் தந்திடக் காண்கின்றோம். ஆயின், இப்பொருள் தம்மைப் பெற்றோர் எத்தனைபேர் என்ற கணக்கினை மறக்கலாமோ, அதற்கான காரணம் அறியாதிருக்கப்போமோ! மண்மகள் தந்தாள் இந்த மஞ்சளும் மா பலாவும், வாழையும் வழங்கினாளே, செந்நெலும் பிறவும் அந்தச் செல்வியின் கரத்தால் பெற்றோம்; பெற்றதால் பெற்றோம் இன்பம்; பெறுகின்றனரோ அதனை மற்றோர் என்று எண்ணிடத் தவறல் தீது; ஏனெனில், இயற்கை அன்னை இங்கு இவை தம்மைத் தந்தது. எவரும் இன்புற்றிருக்க; சிலருக்குப் பலவும், பலருக்குத் துளியுமற்ற பாழ்நிலைக்