பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/161

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

153

காக அல்ல. இத்தனை தந்த பின்னும், இத்தரைமீதில், எத்தனை எத்தனையோ மாந்தர், என் செய்வோம் என்றழுதும், இல்லையே என்று கூறி இடும்பையின் பிடியில் சிக்கித் தத்தளித்திடுதல் கண்டு, தாங்கிக் கொள்வதுதான் உண்டோ! மெத்தவும் கோபம் கொண்டு, சிற்சில நேரந்தன்னில், அடித்துக் கேட்கின்றாள் போலும், அட மடமகனே! உன்னை நம்பி நான் தந்தேன் எல்லாம்! நலிகின்றாரே பல்லோர்! இது உன்றன் கயமையாலே!! ஆகவே, உன்னை உன்றன் கொடுஞ் செயலுக்காக வேண்டி தாக்குவேன், பார்! என் ஆற்றல்! என்று பெரு மழை, பேய்க்காற்று, கடற் கொந்தளிப்பு, நிலநடுக்கம் எனும் கணைகளை ஏவுகின்றாள் போலும். இந்நிலையில், விழாவென்று சொல்லிடவோ இயலவில்லை, விழியில் நீர்த்துளிகள்—உனக்கும் எனக்கும், உள்ளம் படைத்தோர் அனைவருக்கும்.

விண்ணிருந்து மண்ணுக்கு வளமூட்ட வந்த மாமழையைப் போற்றுகிறோம்; போற்றினார் இளங்கோ அன்றே! மண்மீது உள்ளனவும், அவை நம்பி வாழ்ந்திடும் மாந்தரும், அழிந்துபட, மலையென அது கிளம்பி, பெருங்காற்றை உடன்கொண்டு பேரிழப்பை மூட்டினதே, பேச்சற்றுத் திகைத்துக் கிடக்கின்றோம் மூச்சற்றுப் போயினர் பல்லோர் என்றறிந்து.

கடல் சீறி எழுவானேன், கடுங்கோபம் எதனாலே அந்தோ! ஒரு தீதும் செய்திடாத மாந்தர்களை கொல்வானேன்!

எத்தனையோ பிணங்கள் மிதந்தனவாம்; நோயாளி தாக்குண்டு, மருந்து தேடித் தானுண்டும், பிழைத்தெழ முடியாமல், பிணமாவர்; தவிர்த்திட முடிவதில்லை. அது போன்றதோ இஃது? இல்லை! இல்லை! ஒரு துளியும் இது போல நடந்திடக் கூடுமென்று, எண்ணம் எழாநிலையில் இருந்தவர்கள், துயின்றவர்கள், பிணமானார்; அழிவுதனை ஆழ்கடலும் ஏவியதால்,

முறிபடு தருக்களும், இடிபடு மனைகளும், உடைபடும் அமைப்பும், ஓலமிடும் மக்களும், புரண்டோடி வந்திடு புனலும், இழுத்து அழித்திடு சுழலும், அம்மவோ! கேட்டிடுவோர் நெஞ்சு நடுக்குறு விதத்தன என் செய்வர் அந்த மக்கள்; மூழ்கினர்; மூச்சற்றுப் போயினர். சேதி கேட்டிடும் அனைவருக்கும் நெஞ்சில் பெருநெருப்பு, விழியில் நீர்க்கொப்பளிப்பு,