பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/162

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

154

எத்தனையோ இன்னல்களைக் கண்டு கண்டு, அவை தம்மால் தாக்குண்டு, எதிர்த்து நின்று வடுப்பெற்று வாட்டம் ஓட்டிடுவோம் வாழ்வின்பம் பெற்றிடுவோம் என்று உழல்கின்றார், ஏழை எளியோர்கள். அறம் மறந்த நிலையினிலே சமூக அமைப்புள்ள காரணத்தால், ஆயிரத்தெட்டுத் தொல்லை, அவர்கட்கு. பிழைக்க வழியில்லாதார், உழைத்து உருக்குலைந்தார், நம்பிக்கை தேயத் தேய நலிவுற்றார், இத்தகையோர் மெத்த உண்டு பெருமூச்செறிந்தபடி; உயிரோடிருக்கின்றார் ஓர்நாள் வாழ்வு கிடைக்கும் என்று. வறுமையின் தாக்குதலும் அகவிலையின் போக்கதனால் ஏற்படும் அலைக்கழிப்பும் நீதிகிடைக்காமல் அவர்கள் பாதி உயிரினராய் உள்ளதுவும் அறிவோம் நாம்; அறியும் அரசு. எனினும், பொழுது புலருமென்று பொறுத்திருந்து வருகின்றார்; அவர் போன்றோர்க்கு, “வாழ்வு கிடைக்குமென வாடிக்கிடப்பதுமேன்! வற்றிய குளத்தினிலே வண்ணத்தாமரை காண்பதுவும் இயலுமோதான்! உழலுகின்றாய் உயிர்காக்க; உலவுகின்றாய் வாழ்வு கிடைக்குமென்று; உண்மையை நான் உரைக்கின்றேன், கேள்! உனக்கு வாழ்வளிக்கும் வழி காண, இன்றுள்ள உலகுக்கு நேரமில்லை, நினைப்புமில்லை; எதிர்பார்த்து ஏமாந்து இதயம் நொந்து செத்திடுவாய்; சாகுமுன்னம், அணு அணுவாய் உன் எண்ணந்தன்னைப் பிய்த்திடும் ஏமாற்றம் மூட்டிவிடும் வாட்டம்; அதனால் உழல்வானேன் வீணுக்கு; உருண்டோடி. வந்துன்னை அணைத்துக் கொள்கின்றேன்; ஆவியைத் தந்துவிடு; அமைதிபெறு!” என்று கூறியதோ, கொக்கரித்துப் பாய்ந்து வந்த கொடுமை மிகு அலையும்! வாழவைத்திடுதல் எளிதல்ல; வல்லமை மிகவும் வேண்டும்; சாகடித்திடவோ எளிதிலே இயலும், வா! வா! என்றுகூறி மேல் கிளம்பிக் கொதித்துவந்த அலைகள், மாந்தர் உயிர் குடிக்கும் நச்சரவுகளாயின அந்தோ!! பிணமாகி மிதந்த அந்த மாந்தர் உள்ளந்தன்னில் என்னென்ன எண்ணங்கள் உலவி இருந்தனவோ, எவரறிவார்! மணவாளனாவதற்கு ஏற்றவர்தான் அவர்! பெற்றோர் மகன் மனத்தைக் கண்டறிந்தே செய்கின்றார் இந்த ஏற்பாட்டினை, பெறுவேன் நான் மன நிறைவு என்றெண்ணி மகிழ்ந்திருக்கும் மங்கையரும் இருப்பரன்றோ, கத்தும் கடல் அனுப்பப் பாய்ந்து வந்து அலை கொத்திக்கொண்டு சென்ற பல்லோரில்! பூவும் மஞ்சளுடன் போனவர்களும் உண்டே! காய் இது, கனியும் விரைவினிலே என்று கூறத்தக்க பருவ-