பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/172

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

164

காத்திடவே, சிறை சென்றான் என் செம்மல்! என்று பேசிப் பெருமிதம் அடையத்தான் செய்வர். பலப் பல இல்லங்களில், பாற்பொங்கல் இன்றிங்கு, பண்பற்ற ஆட்சியாளர் என் மகனை இங்கிருக்க விட்டாரில்லை; இருட்சிறையில் அடைத்திட்டார்; இருப்பினென்ன! கண் கசிய மாட்டேன் நான், கடமை வீரனவன்! காட்டாட்சி போக்குதற்குப் போரிட்டான்; மகிழ்கின்றேன் என்று கூறிடுவர், தமிழ் மரபு அறிந்ததனால்.

பொங்கற் புதுநாளில் எத்தனையோ இல்லமதில், இணைந்து நம்மோடு இல்லாது போயிடினும், நம்மைப் பற்றி எண்ணாதார், இல்லை என்று கூறிடலாம். மக்களைத் தாக்கிடும் கேடு எதுவானாலும், கேட்டிட முன்வருவோர் கழகத்தார்! ஆமாம்! அவர்கள் கேட்ட உடன், பாய்கின்றார் அரசாள்வோர், எனினும் பயமும் கொள்கின்றார்; பாவிமகன் கழகத்தான் பற்பலவும் கூறித்தான், அம்பலப்படுத்தி நம் ஆட்சிக்கு ஆட்டம் கொடுத்தபடி இருக்கின்றான் என்றஞ்சிக் கிடக்கின்றார் ஆளவந்தார் எனப்பேசிச் சிரித்திடுவர். புள்ளினம் கூவினதும், பூக்கள் மலர்ந்ததும், புறப்பட்டான் கதிரவனும், புறப்படுவோம் துயில்நீங்கி என்று எல்லா மாந்தருமா கிளம்புகின்றார்? கிளம்பாதுள்ளோர் கண்டு கதிரவன் கவலை கொள்ளான். பாடிடவோ மறவாது புள்ளினந்தான், மலர்ந்து வரவேற்கும் பூக்களுமே! தம்பி! கதிரவனாய், கானம் பாடிடும் வானம்பாடியாய், மணம் பரப்பிடும் மலராக நீ இருக்கின்றாய். மட்டற்ற மகிழ்ச்சி எனக்கு, மாசற்றது உன் தொண்டு என்பதனால், நாம் ஈடுபட்டுள்ள பணி எதனையும் எடுத்தாய்ந்து பார்த்திட்டால், தூயது அப்பணி, அறிவாளர் வழிநின்று ஆற்றுகின்றோம் அப்பணியினை என்பதனை அறிந்திடலாம். வந்து புகுந்து கொள்ளும் இந்தியினை எதிர்க்கின்றோம்; இடரில் தள்ளுகிறார் இந்திக்குத் துணை நிற்போர்; இழித்துப் பேசி விட்டு எனக்கென்ன சுவைப்பண்டம் என்று கேட்டு நிற்கின்றார் மாற்றார் தொழுவத்தில், மரபழித்தார்; ஆயினுமென்! நம் கடமைதனை நாம் செய்தோம் என்ற மன நிறைவு நமக்கு இன்று; நாளை வரலாற்றில் அதனைப் பொறித்திடுவர். எதிர்த்தாய் என்னபயன்? இந்தி ஏறும் அரியாசனம் என்பது உறுதியன்றோ! என்று கேட்பாரும் உளர்; கெடுமதியால் நடமிடுவோர் கேட்டிடட்டும். கேலியாம் அம்மொழியும் நம் விலாவை வேலாகக்