பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/173

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

165

குத்தட்டும்; ஈட்டியாய் அப்பேச்சு நம் இதயத்தில் பாயட்டும்; இருக்கும் வீரம் பன்மடங்கு கொப்பளித்து எழட்டும்; தூற்றுவோர் தூற்றட்டும், தொடரட்டும் நமது பணி என்போம் நாம். மலக்குழி கண்டேன் நான், ஒதுங்கி நடக்கின்றேன். மலமே உனக்கு மணமளிக்குதே அந்தோ! என்றுகூட நாம் அன்னவரைக் கேட்டிடல் வீண் வேலை. எதிர்த்து வந்த சிறுத்தையினை எதிர்த்து நின்றேன் வீரமாய் நான்; என் உடலில் அதன் கீறல். பற்கள் படிந்துள்ள நிலைதான்; குருதி கசிகிறது உண்மை; சொல்ல நான் துடிதுடித்தேன், எனைத்தாக்கி ஓடிப்பதுங்கி, உறுமிக்கிடக்கிறது அச்சிறுத்தை? கூடி அதனைத் தாக்கிக் கொன்றுபோட வாராத கோழையே! என்னை நீ கேலிவேறு செய்வதுவோ! சிறுத்தையின் வாயினிலே கசியும் செந்நீரைப் பானமாய்ப் பருகும் ஈ, எறும்பு, பூச்சி, நீ! என்று கூறிடலாம் ஏசித்திரிவோரை! வீண்வேலை! நேரம் இல்லை! நம்மாலானவற்றை நாம் செய்தாக வேண்டும்; நாமிருந்தும் இந்திக்கு எதிர்ப்பு இல்லை என்ற பேச்சு எழவிடோம், இது உறுதி.

மொழித் துறையினிலே புகுத்தப்படும் அக்கிரமம் நிறைந்த ஆதிக்கம், அத்துடன் நில்லாது. காலிலோ கரத்திலோ எந்த இடத்திலே கருநாகம் தீண்டிடினும், உடலெங்குமன்றோ விஷம்பரவி உயிர் குடிக்கும். அஃதே போல, மொழித் துறையினிலே ஆதிக்க நச்சரவு பதித்திடும் பல்லினின்றும் கக்கிடப்படும் நஞ்சு, தமிழரின் உடல் முழுவதிலும் பரவும்; வாழ்வு அழியும்.

மொழி ஆதிக்கம், நிர்வாக ஆதிக்கத்துக்கு இடமேற்படுத்தும், அஃது பொருளாதார ஆதிக்கத்திற்கு வழி கோலும், பிறகோ தமிழர் அரசியலில் அடிமைகளாகி, அல்லற்படுவர். இதனை அறிந்தோர் கூறி வருகின்றனர்; ஆலவட்டம் சுற்றிடுவோர் மறுத்துப் பேசி, ஆளவந்தார்களை மகிழவைக்கின்றனர்.

எமக்கேன் விடுதலை!! விடுதலை பெற்றால் நம்மைக் காத்திடும் பொறுப்பினை எவர் ஏற்றுக்கொள்வர்? வேலைக்கு வழி ஏது? சோற்றுக்கு வழி ஏது? செத்து விடத்தான் இது வழி. ஆகவே, விடுதலை வேண்டாம்!! வெள்ளை எஜமானர்களின் பாதமே நமக்குப் பாதுகாப்பு என்று நீக்ரோக்களில் சிலரைப் பேசவைத்தனர் வெள்ளை