168
“அதைத்தானே நாங்கள் செய்து வருகிறோம், சமதர்மத் திட்டமிட்டு” என்கிறார்கள் ஆளவந்தார்கள்.
இவர்கள் மேற்கொள்ளும் சமதர்மத்தைக் கண்டு நாம் கவலைப்படத் தேவையில்லை. இவர்களின் சமதர்மம் நமது உரிமைகளையும் நமக்குள்ள சலுகைகளையும் பாதுகாத்திடும் சமதர்மம்! ஆகவே, முதலாளிகளே! சமதர்மம் என்ற சொல் கேட்டு மிரண்டிடாமல் இந்தியாவில் எத்தனை எத்தனை ஆயிரம் கோடி முதலையும், அச்சமின்றிப் போட்டுத் தொழில் நடத்திடுவீர்!... என்று அமெரிக்க நாட்டு முதலாளிகளுக்கு, அந்நாட்டு அரசியற் பெருந்தலைவர்கள் கனிவாகக் கூறுகிறார்கள்; அமெரிக்கக் கோடீஸ்வரர்கள், இந்தியா போன்ற ‘சந்தை’ வேறு இல்லை என்று கூறிப் பேரானந்தம் கொள்கின்றனர்.
அமெரிக்க ‘முதல்’ வேறு எங்கும் ஈட்டிக் கொடுத்திடாத அளவு ‘வருவாய்’ இந்தியாவிலே அவர்களால் பெறமுடிகிறது. பெயர் சமதர்மம்!!
நாற்பதனாயிரம் தொழில் வணிகக் கோட்டங்கள் இணைந்த பிரிட்டிஷ் தொழில் அமைப்பு, இதுபோன்றே, “நாம் இந்தியா மேற்கொண்டுள்ள சமதர்மத் திட்டம் பற்றிக்கவலையோ அச்சமோ கொள்ளத் தேவையில்லை. சமதர்மம் என்று அவர்கள் சொல்லுவதாலே நாம் தொழிலிலே போட்டிருக்கும் முதலுக்கு எந்தவிதமான பாதகமும் ஏற்பட்டுவிடாது.” என்று கருத்தறிவித்திருக்கிறது.
பொருள் விளங்குகிறதல்லவா தம்பி! நோஞ்சான், பயில்வான் என்று பெயர் வைத்துக்கொண்டிருக்கிறான், அவ்வளவுதான்! முதலாளிகளின் முகாம் இந்தியா... அதற்குப் பெயர், சமதர்மம்!!
உண்மை நிலை இதுபோல இருப்பதனால்தான் இவர்கள் நடத்திக் கொண்டுவரும் திட்டம், பணக்காரர்களுக்கே பெரிதும் பயன்பட்டு விட்டிருக்கிறது. மகனா லோபீஸ் குழு (துரைத்தனமே அமைத்தது) இதனை எடுத்துக்காட்டியும் விட்டது. ஆகவே, ஏழையை வாழவைத்து, எல்லோரும் பொங்கற் புதுநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடிடத் தக்கதோர் நிலையைக் காணவேண்டுமானால், இன்றுள்ள அரசை நம்பிக் கொண்டிருந்தால், ஏமாற்றமடைவோம். கவனித்துப் பார், தம்பி!