பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/181

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

173

என்பதால்! அந்தப் படைத்தலைவன், விருதுகள் பதித்த ஆடம்பர உடை அணிந்துகொண்டு, கெம்பீரமாகக் குதிரை மீதமர்ந்து வருவான், படைவரிசையைப் பார்வையிட! வழக்கமாகக் கவிஞர்கள், இவர்களைப் பாராட்டுவர், புகழ் பாடுவர்.

இவர்கள் அல்ல உள்ளபடி பாராட்டுப்பெற வேண்டியவர்கள். போரிட்டு மடிந்தவர்கள் வேறு வேறு! இந்தத் தலைவன் காட்சிப்பொருள்! இவனையா நான் பாடுவேன்! இவனை எனக்குத் தெரியாதா! வீரனா இவன்? இவன் மன்னனின் செல்லப் பிள்ளை! என்று கேலிமொழியால் துளைக்கிறார் மேஸ்பீல்டு—துளைத்துவிட்டுக் கூறுகிறார், நான் பாடப்போவது எவரைப்பற்றித் தெரியுமா?

எவர், அவர்? என்று
எவரும் அறியா நிலையினர்!
ஏறு நடைபோட்டு
வெற்றி கண்டார்!
இளைஞர்!

இவர்களைப் பற்றி என் கவிதை! என்கிறார். ஏன்? ஒரு போரிலே மும்முரமாக ஈடுபட்டு, குருதிகொட்டி, வெற்றி ஈட்டியவர்கள் இந்த இளைஞர்கள்—ஆடம்பர உடையுடனுள்ள படைத்தலைவன் அல்ல! நான் அந்தப் ‘போலி’யைப் புகழமாட்டேன் என்கிறார்.

கொலு இருக்கும்
கோவை அல்ல!

என்று திட்டவட்டமாகத் தெரிவித்து விடுகிறார். போர் குறித்த புகழ்ப் பாட்டு என்றால், கொலு இருக்கும் மன்னனைப் பற்றித்தான் மற்றவர்கள் பாடியிருக்கிறார்கள்—இது நாள்வரை. நான் அப்படி அல்ல!

குடிமகனாய் உள்ளோன்
ஊர்சுற்றும் உழைப்பாளி
தோள்குத்தும் முட்கள் நிறை
மூட்டைதனைச் சுமப்போன்,
தாங்கொணாப் பாரந்தனைத்
தூக்கித் தத்தளிப்போன்
கலத்தில் பணிபுரிவோன்
உலைக்கூடத்து உழல்வோன்