பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/182

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

174

ஏதோ இசை எழுப்பி அதனால்
இனிமைபெற எண்ணுபவன்
ஏரடிப்போன்!
தூக்கம் தொட்டிழுக்கும்
துயர் கக்கும்
கண்கொண்டான்.

இவர்களைப்பற்றி நான் பாடுவேன் என்கிறார். இனிமேலா பாடவேண்டும்; இதோ பாடியே விட்டாரே,

தூக்கம் தொட்டிழுக்கும்
துயர் கக்கும்
கண்கொண்டான்

என்ற வரிகள் அந்த ஏழையின் நிலையை அப்படியே படம் பிடித்துக் காட்டிவிடுகிறதே! மேஸ்பீல்டுடைய இதயந்தன்னில் எவரெவர் இடம்பெற்றுள்ளார் என்பது விளக்கமாகிறதே. இந்தக் கனிவு, மற்றவர்களால் புறக்கணிக்கப்பட்டுப்போன, ஏழை எளியோர்க்காக, உழைத்து உருக்குலைந்தோருக்காக! ஏழையிடம் இந்தக் கனிவு காட்டாத கவிவாணர்களை அலட்சியமாகக் கருதுகிறார்; ஒதுக்கித் தள்ளுகிறார்;

மற்றவர் பாடட்டும்
மகிழ்ச்சி தரும்
மாடு மது குறித்து!

என்று இடித்துரைக்கிறார். செல்வவானைப் பற்றி அவனுடைய சிங்கார வாழ்வு பற்றி, அவன் மந்தகாசம் பற்றி, அவன் மாளிகையிலுள்ள மதுவகை பற்றிப் பாடுகிறார்களே, அவர்களைக் குறித்து மேஸ்பீல்டுவுக்கு அத்துணை எரிச்சல். அவர்கள் பாடட்டும் அவை பற்றி என்று ஒதுக்கித் தள்ளிவிடுகிறார்.

என் பாடல்
குப்பை கூளம் பற்றி
குப்பன் சுப்பன் குறித்து

என்று அறிவிக்கிறார். இவர்களைப் பற்றிய கவிதையிலே கவர்ச்சி இருக்காதே, மெருகு இருக்காதே என்று கேட்பவர் உளர் என்பது தெரியுமல்லவா இந்தப் புதுமைக் கவிஞனுக்கு?