பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/192

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

184

வின் ஆட்சி மொழிகள் என்று சட்டமாக்கப்பட்டு, அதன்படி நமது தமிழ் மொழி ஆட்சிமொழி என்ற நிலைபெற்று, பிறகு இந்தியைப் பரப்ப, மக்கள் அமைப்பு முயற்சி எடுத்துக் கொள்ளும்போது என் உதவி கிடைக்குமா என்று என்னை ஒருவர் கேட்கும்போது. கிடைக்கும் என்று கூறுவதிலே என்ன தவறு காண்கிறாரோ முதலமைச்சர், எனக்குப் புரியவில்லை.

அந்த நாள் வருகிறபோது, இந்தியை இங்குப் பரப்பும் முயற்சி மட்டுமல்ல, தமிழ்மொழியைப் பிற இடங்களில் பரப்பும் முயற்சியும் நடந்துவரும்.

இப்போதே, தென்னக மொழிகளில் ஒன்றை, இந்தி மாநிலத்தவர் படித்துக்கொள்ள வேண்டும் என்ற பேச்சு எழவில்லையா! நானேகூடச் சொன்னேனே, மாநிலங்கள் அவையில் பேசும்போது, தமிழ் கற்று, அம்மொழியில் உள்ள இலக்கியச் சுவையைப் பருகினால், வாஜ்பாயே கூட, தமிழ்தான் தொடர்பு மொழியாக இருக்கவேண்டும் என்று ஏற்றுக்கொள்ளுவார் என்று. உடனே அவர் என்ன துள்ளிக்குதித்தெழுந்து. “முடியாது!! முடியாது! அப்போதும் தமிழ் மொழியைத் தொடர்பு மொழியாக ஏற்றுக்கொள்ள முடியாது” என்றா பேசினார்? இல்லை! ஏன்? வாதங்களின் பொருத்தத்தையும் நிலைமை விளக்கத்துக்கான பேச்சின் பொருளையும் உணருபவர்கள், முதலமைச்சர் காட்டும் போக்கினைக் காட்டமாட்டார்கள். ஆனால், முதலமைச்சர் இப்போது உள்ள நிலைமையில் நான் அவரிடம் அதிக அளவு நிதானத்தன்மையை எதிர்பார்ப்பதற்கில்லை.

நிருபர்கள் மாநாட்டிலேகூட ஒரு நிருபர், பதினான்கு மொழிகளும் ஆட்சிமொழிகளாக்கப்பட்டு, பிறகு காலப்போக்கில், மக்களின் முயற்சியால், சர்க்காரின் பலமின்றி, ஒரு மொழி தொடர்பு மொழியாகட்டும் என்று கூறுகிறீர்களே, அந்தக் காலம் வரும்போது, மக்கள் வளமுள்ள மொழியாகப் பார்த்துத்தானே தொடர்பு மொழியாகக் கொள்வார்கள் என்று கேட்டபோது நான், “ஆமாம்! வளமுள்ள மொழியைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். அதனால்தான் சொல்கிறேன். தமிழ் மொழியைத் தொடர்பு மொழியாகக் கொள்ளுங்கள் என்று. அது