பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/33

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

25

நிம்மதியாக வாழ்ந்திட வழிதேடிக்கொள்வோம் என்று பலர் எண்ணுகின்றனர். காரணம், அவர்கள் காண்கின்றனர், கொடி தூக்கியும் கோல் சுழற்றியும், காங்கிரசாட்சியின் கடைக்கண் பார்வையின் பயனாக, இலட்சாதிபதி ஆவதை! அவன் ஏறும் மோட்டாரின் மெருகு குலையாதிருப்பதையும், இவன் ‘ஜாண்’ வயிற்றுக்காக உடல் கருத்திட இளைத்திட உழைத்து கிருமிக் கூடாவதையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, ஆளவந்தாரின் அடிவருடினால் என்னென்ன ஆதாயம் கிடைக்கிறது என்பது புரிகிறது; புரியவே, நாம் ஏன் பொல்லாப்பைத் தேடிக் கொள்ளவேண்டும், என்று ஒதுங்கிடவும், இணங்கிடவும், வணங்கிடவுமான நிலையினைப் பெறுகின்றனர்.

ஒருபுறம் அச்சம் — மற்றோர்புறம் ஆளவந்தாரின் நேசத்தால் கிடைக்கக்கூடிய சுவைபற்றிய எண்ணம் கிளப்பிவிடும் ஆசை—இந்த இரண்டிலிருந்தும் தப்பி, தட்டிக் கேட்க யார் உளர் என்று தர்பார் மொழி பேசிடும் ஆட்சியினரை (இந்தி எதிர்ப்பு அறப்போர்) எதிர்த்து நிற்கும் துணிவும், கடமை உணர்வும் இந்த அளவுக்கு இருப்பதைப் பார்க்கும்போது மகிழ்ச்சி மட்டுமல்ல, மக்களாட்சிமுறை மடிந்து போகாது, மாண்புள்ளதாக்கிட முடியும் அந்த முறையை என்ற நல்ல நம்பிக்கையேகூட ஏற்படுகிறது. ஒவ்வோர் விழாவும் இந்த அரிய பாடத்தைத்தான் எனக்கு அளித்து வருகிறது; உனக்கும் அதேவிதமான நிலை என்று எண்ணுகிறேன்.

தமிழுக்கு ஒரு ஆபத்தும் இல்லை. அம்மொழி ஒரு போதும் அழியாது, அது இலக்கியத்தின் மூலம் இறவா வரம் பெற்றுவிட்டது என்று பேசுவதும், பேச்சினைக் கேட்பதும் இனிப்பளிக்கலாம். கவிதைகளை எடுத்துக்காட்டி, உவமை நயமதை உரைத்து, கருப்பஞ்சாற்றினிலும் இனித்திடும் இன்மொழியாம் எமது தமிழ் மொழிக்கு, எவரே இழுக்குத் தேடவல்லார்! தென்றலின் இனிமை, திங்களின் குளிர்ச்சி, தேனின்சுவை, கடலின் அலையோசை, அருவியின் மழலை, குழவியின் இசை, இயற்கை எழில்—எவரேனும் இந்த இயல்பினைக் கெடுத்திட இயலுமோ!! அஃதேபோல, தமிழின் மாண்பினை மடிந்திடச் செய்திடல் எவராலும் இயலாது என்று பேசலாம்—வீரம் குழைத்து. ஆனால், தம்பி! இந்தி மட்டுமே ஆட்சிமொழி என்றாகிவிட்டால், இன்பத் தமிழ் பொலிவிழந்து போற்றுவாரிழந்து, வலிவிழந்து வளம்