பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/34

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

இழந்து, என்றோ தீட்டிய ஓவியமாய், எப்போதோ கேட்ட கீதமாய், கனவினில் கண்ட கனியாய்ப் போய் விடும்—வீணுரை அல்ல இது—வேண்டுமென்றே பயமூட்டக் கூறுவதுமல்ல; அரசுக் கட்டிலிலே இந்தி என்று ஆகிவிட்டால், முரசு முழங்கிய தமிழகத்தின் அள்ள அள்ளக் குறையாத சொத்தாக இருந்துவரும் செந்தமிழ், கண்ணகிபோல் கண்ணீர் உகுத்து, கடந்த காலத்தை எண்ணி ஏக்கமுற்று, கசிந்து உருகிப்போய்விடும்.

ஒன்று புரிந்துகொள்ளச் சொல்லு தம்பி! முதற்கட்டம், இந்தி மத்திய சர்க்காரின் ஆட்சிமொழியாவது; அடுத்த கட்டம்? விளக்கவா வேண்டும்! மத்தியில் ஒன்று, மாநிலத்தில் வேறொன்று என்று இருப்பதனால் ஏற்படும் இன்னல் குறித்துச் சிலபல கூறிவிட்டு, மத்திய சர்க்காருக்கு ஆட்சி மொழியாக ஏற்றுக்கொள்ளப் பட்டுவிட்ட இந்தியே மாநிலத்திலும் ஆட்சி மொழியாக இருப்பது தான் வசதி, முறை என்று வாதிட்டு, அது போன்றே செய்தும் விடுவர்.

நமது அமைச்சர்கள் வாளாயிருப்பரோ? என்று கேட்பர், காங்கிரசை நம்பி உள்ளோர்! வேறு என்செய்வர்? வளைவர், நெளிவர், பணிவர், பிறகு ஆதரவாளராகி விடுவர். பார்க்கிறோமே ஒவ்வொன்றிலும், வேளாண் பெருங்குடி மகன், வேறெவரும் பெறாத அளவு பதவி அனுபவம் பெற்ற பெரியவர் பக்தவத்சலனார். இந்தியில் பரிட்சை எழுதத் தேவையில்லை என்றார் ஓர் நாள்; காரணம் காட்டினார், மறுக்கொணாததாக; பிறகோ. லால்பகதூர் அப்படியா? என்றார், இவர் ஆமென்றார், அவர் ஏன் என்று கேட்டார், இவர் காரணம் கூறினார், அவர் கனைத்தார் இவர் கலங்கினார், பரீட்சை இல்லா விட்டால் படித்திட மனம் வராதே என்றார், அது உண்மைதான் என்றார் இவர், ஆகவே, என்று ஆரம்பித்தார் லால்பகதூர், இதோ பரீட்சை வைக்கிறேன் என்று முடித்தாரே முதலமைச்சர்.

இவர் போன்றார், இந்திதான் இங்கும் ஆட்சிமொழியாதல் முறை என்று டில்லியினர் கூறினால், தாயின் மேல் ஆணை! தாய்த் தமிழைத் தாழவிடேன்! என்றா முழக்கமெழுப்புவர். டில்லியாரின் தாக்கீதினைத் தலைமீது வைத்துக்கொண்டு, இதுவே தகுந்த முறை என்று ஒப்பம் கூறுவர்; கண் கசிந்திடும் தமிழரைப் பார்த்தோ, “ஏன்