பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/38

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

நடையுள்ள தாக்கி, அவர்களின் தூற்றலையும் ஒரு தத்துவ விளக்கம் போன்றதாக்கி நான் தந்திருக்கிறேன்—மேலே.

படு! படு! சட்டத்தை மீறினால் சும்மாவிடுவார்களா!

எதிர்த்தால் பிடித்திழுத்துக் கொண்டுபோய் கொட்டடியில் தள்ளுகிறார்கள்.

பேச்சு என்ன இதுகளிடம்! கூப்பிடு போலீசை! கொண்டுபோகச் சொல்லு சிறைக்கூடம்.

நாங்கள் யார் என்று தெரிந்துகொள்ளாமல், எமக்கு உள்ள அதிகாரம் எப்படிப்பட்டது என்பதை அறிந்து கொள்ளாமல் எங்களையா எதிர்க்கிறாய்? என்ன நடக்கும் என்பதைத் தெரிந்துகொள்!

இவ்விதமாகப் பேசுபவர்கள், சட்டத்தை மீறினால் சங்கடப்படவேண்டி நேரிடும் என்பதனை எடுத்துக் காட்டுகிறார்கள் என்றே வைத்துக்கொள்வோம். சட்டத்தை மீறும்போது, சட்டத்தின் பாதுகாவலரின் பிடியில் சிக்குவோம் என்பதும், கொட்டப்படுவோம் என்பதும் எவருக்கும் தெரியும். எனவே அதனை நினைவு படுத்துவதாகக் கூறிக்கொண்டு நிந்தித்துக்கிடப்போர் தமது நீண்ட நாவினுக்கு அதிக வேலை கொடுத்து அலுத்துப்போகத் தேவையில்லை.

சட்டம் சமுதாயக் கட்டுக்கோப்புக்கு இன்றியமையாதது என்ற அரிச்சுவடி போதிக்கத் தேவையில்லை, அதுபற்றிய பொது அறிவு சமூகத்தில் பரவலாக ஏற்பட்டு விட்டிருக்கும் இந்த நாட்களில்.

சட்டத்தைக் குறித்த தன்மைகளை எந்த அளவுக்கு அறிந்திருக்கிறேன் என்பதை எடுத்துக்காட்ட அல்ல, என்னை நிந்திக்கும்போதுகூட, பொதுத் தத்துவவிளக்கத்தை உள்ளடக்கிப் பேசட்டும் என்பதற்காகவும், அவர்கள் எத்தனை இழிமொழி பேசித் தமது இயல்பினையும், தம்மிடம் உள்ள சரக்கின் தன்மையினையும் எடுத்துக் காட்டியபடி இருந்தாலும், சேற்றுக் குட்டையிலிருந்தும் சில கெண்டைகளைத் தேடிப் பெறுவதுபோல, அவர்களின் ஆபாசப் பேச்சிலிருந்தும், கிளறி எடுக்கத்தக்கவைகளை. நான் பெற முயற்சித்திருக்கிறேன் என்பதைக்