பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/40

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

சட்டம், கண்ணீர் கண்டு கடமையை மறந்துவிடாது; மயக்குமொழி கேட்டு, வழிதவறிச் செல்லாது.

சட்டம், தன்முன் நிற்பது யார்? நண்பனா? பகைவனா? உற்றார் உறவினனா? உதவி செய்தவனா? ஊரிலே பெரிய புள்ளியா? ஊறு விளைவிக்கக்கூடியவனா? என்ற இவைபற்றி எண்ணித் தடுமாற்றம் கொள்ளாது. செய்தது என்ன? எப்படிச் செய்தான்? யார் சான்று? எத்தகைய குற்றம்? குற்றமற்றவனாக இருக்கக்கூடும் என்று ஐயப்பாடு எழவாகிலும் இடம் இருக்கிறதா? எனும் இவைபற்றித்தான் எண்ணிப்பார்த்து முடிவு செய்யும்.

கலம் நேர்வழி செல்ல உதவும் கருவிபோல, சமுதாயம் ஒழுங்காக இருந்துவரத் துணையாக நிற்பது சட்டம்.

சட்டத்தை மதிக்காமல் சமுதாயத்தில் இடம் பெற்று இருந்திட இயலாது; அனுமதி கிடையாது.

சட்டம், அவரவருடைய விருப்பத்திற்கேற்ற வடிவம் கொள்ளாது—வடிவம், இவ்விதம் இருக்க வேண்டும் என்று உரியவர்கள் கூடி முடிவு செய்தான பிறகு மீண்டும் உரியவர்களே கூடி மாற்றினாலொழிய அமைந்துவிட்ட வடிவம், அனைவரும் ஏற்றுக்கொண்டாக வேண்டியதாகி விடும்.

தத்தமக்கு விருப்பமான முறையில், வாழ்க்கை நடத்தவும், அத்தகைய வாழ்க்கை நடத்துவதற்குத் தேவைப்படுபவைகளைத் தத்தமது இயல்புக்குத்தக்க முறையிலே தேடிப் பெறவும் அவ்விதம் தேடிப் பெற்றவைகளை வேறு எவரும் பறித்துக்கொள்ளாது பார்த்துக் கொள்ளவும், தடுத்திடவும் தேவைப்படும் பாதுகாப்புப் பெற்று, வாழ்ந்துவர ஏற்பட்ட அமைப்பே, சமுதாயம் என்று ஆகிறது.

தனித்தனி விருப்புக்கு ஏற்றபடி அமையும் வாழ்க்கையும், அந்த வாழ்க்கையை அமைத்துக் கொள்ளப்படும் முறையும், மற்ற எவருடைய வாழ்க்கைக்கோ, வாழ்க்கை அமைவதற்காக அவர்கள் எடுத்துக்கொள்ளும் முயற்சிக்கோ, கேடு மூட்டாததாக அமைந்தாக வேண்டும்; அப்போதுதான், சமுதாயம் சாயாமல், சரிந்து போகாமல் இருக்க முடியும்.