பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/58

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

என்றால், காரணம் என்ன? மன்னன், மணி மண்டபத்தில் காணும் காட்சி மகோன்னதமானது என்றாலும், அவனுக்கு மருத்துவம் பலப்பல நடாத்தியும் குமட்டல் போகவில்லை என்றால், மன்னன் மனம், மணி மகுடம், சிங்காதனம். சிற்றரசர் பணிவு, சிங்காரிகளின் நெளிவு இவற்றிலா செல்லும்; கோலாகலம் இவ்வளவு இருந்து என்ன பலன், இந்தக் ‘குமட்டல் நோய்’ என்னைவிட்டுப் போகவில்லையே என்று எண்ணுகிறான்; இது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து, மருந்துக்குக் கட்டுப்படாமல் போய்விடுமானால்.........! அந்த மன்னனுக்கு மலரிலே நெடியும், தேனிலே கசப்பும், தென்றலிலே வெப்பமும் இருப்பதாக அல்லவா தோன்றும்? மனம் படாதபாடு படத்தான் செய்யும்.

அதுபோல, ஆயிரவர் ஆரத்தி எடுக்க, பல்லாயிரவர் பராக்குக்கூற, பட்டத்தரசரெனக் கொலு இருப்பினும், காமராஜரின் மனம் என்ன எண்ணுகிறது? இத்தனை அலங்காரம், ஆடம்பரம், இருந்து என்ன பயன்? அந்தப் பயல்கள், பதினைந்திலிருந்து ஐம்பதாகிவிட்டார்களே! பிளவு, இனி அழிவு என்று கணக்கிட்டோம், வளர்ந்து விட்டார்களே! சென்னை மாநகராட்சியை மறுபடியும் கைப்பற்றி விட்டார்களே, பல நகராட்சிகளைக் கைப்பற்றி இருக்கிறார்களே! இதே பதவி தேடும் வேலையோடு இருந்து தொலைக்காமல் சளைக்காமல் அறப் போராட்டமும் நடத்தியபடி இருக்கிறார்களே! இவ்வளவுக்கும் இந்தப் பொதுமக்கள் ஆதரவு தருகிறார்களே! தலை காய்ந்ததுகளெல்லாம் கூடிக்கொண்டு, நமது ‘தர்பாரை’ எதிர்க்கின்ற கொடுமையைக் காணவேண்டி இருக்கிறதே. இந்த இலட்சணத்தில், நாம் அளவு கடந்த செல்வாக்குப் பெற்ற அகில இந்தியத் தலைவராகிவிட்டோம் என்று புகழ்கிறார்கள். சே! சே! சே! என்ன இது! என்ன இது!— என்று எண்ணுகிறார்; ஒரு கசப்பு, குமட்டல் ஏற்படுகிறது!!

பைத்தியக்காரர்கள்.
பகற்கனவு காண்பவர்கள்

என்று ஏசுகிறார்—மனக்கசப்புக்காரணமாக. குமட்டலின் விளைவாக

குமட்டல், தம்பி! கெட்ட வியாதி! உடற்கூறு அறிந்தவர்கள் அதன் இயல்புபற்றிக் கூறுகிறார்கள்.