65
ஏற்பட்ட நஷ்டம் வரையில் கொடுத்திடலாம்; முடியும்” என்றான் சீமான் மகன்.
“விலை ஏற்றத்தை மூட்டி விட்டதனால் ஏற்பட்ட விபரீத விளைவுகளில், இன்னொன்று பாக்கி இருக்கிறதே! காட்டுகிறேன் வா!” என்று கூறி அந்த நண்பன் சீமான் மகனை அழைத்துக்கொண்டு, ஒரு முட்டுச் சந்திலிருந்த ஒரு நிலையத்துக்குள் சென்று, அங்கு, சட்டை தைத்துக் கொண்டிருந்த இளமங்கையைக் காட்டினான். அவள் ஒரு புன்னகை உதிர்த்தாள். “இன்று நாலு டாலர் கிடைக்கும் எனக்கு” என்றாள் அந்தப் பெண். நண்பன், சீமான் மகனை அவளுக்கு அறிமுகம் செய்து வைத்தான்.
“ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கோதுமைவிலை ஏறிவிட்டதே; அந்த விலை ஏற்றத்தை மூட்டியவரின் மகன் இந்த இளைஞன். தன் தகப்பனாரின் செயலால் சீரழிக்கப் பட்டவர்களுக்கு ஏதாகிலும் இதம் செய்ய வேண்டுமென விரும்பி வந்திருக்கிறார்” என்றான். அந்தப் பெண்ணின் புன்னகை மடிந்தது; முகம் கடுகடுத்தது; எழுந்தாள், சீமான் மகனை நோக்கி வெளியே போ! என்று கூவவில்லை, கையால் குறி காட்டியபடி நின்றாள்.
தம்பி! கதையை இந்த அளவுடன் நிறுத்திவிட எண்ணுகிறேன். ஏனெனில், என் நோக்கம், இரு இளைஞர்கள், ஒரு மங்கை, இவர்கட்கு இடையிலே ஏற்பட்ட தொடர்பு பற்றிய விவரம் கூறுவது அல்ல. உணவுப் பண்டங்களின் விலை ஏற்றம், சீமான்களின் வாணிப முறையின் விளைவு என்பதைக் காட்டவும், அந்த விலை ஏற்றத்தால் தாக்கப்படும் ஏழைகளுக்கு ஏற்படும் இன்னல், அதிகவிலை கொடுத்ததால் ஏற்பட்ட பண நஷ்டம் மட்டுமலல விபரீதமான பல விளைவுகள் ஏற்பட்டுவிடுகின்றன என்பதையும் எடுத்துக்காட்டவே இந்தக் கதையைக் கூறினேன். கதையும் என் கற்பனையில் உதித்தது அல்ல. அல்லற்படுவோர்களின் உள்ளத்தைப் படம் பிடித்துக் காட்டத்தக்க விதமான சிறு கதைகளைத் தீட்டிய வித்தகர் ஓ. என்ரியின் கற்பனை; நான் அதிலிருந்து கருத்தினை எடுத்து என் வழியில் எழுதித் தந்திருக்கிறேன்.
ஓ. என்ரி, சிறுகதை தீட்டுவதிலே வல்லவர் மட்டு மல்ல; அதிலே விந்தை பல இழைத்தளிப்பவர். இந்தக் கதையிலும், விலைவாசி விஷம்போல் ஏறுவதால்—ஏற்றி