பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/75

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

67

சீமான் மகனின் மனமும் திருந்திவிடும்; இம்சை செய்யப்பட்டவர்களுக்கு இதம செய்திடுவான். என்ற கருணை பற்றிய விளக்கமளிக்க அல்ல அவர் விரும்பியது.

ஏழைக்கு இழைக்கப்படும் இன்னலுக்கு, இன்னல் இழைத்தவர்களே பிறகோர் நாள் இதம் செய்திட விரும்பி முன்வந்தாலும், நொந்துபோன ஏழையின் வாழ்வை, இரக்கம், கருணை, உதவி மூலம் மலரச்செய்திட முடியாது. கசங்கிய மலர், மீண்டும் தண்ணீருக்குப் பதில் பன்னீர் தெளித்தாலும், எழில் பெற முடிகிறதா? அதுபோலத்தான்.

இந்தக் கருத்தை விளக்கவே அவர் கதை புனைந்தளிக்கிறார்.

இரக்கம், பரிவு, பாசம், இவை தனிப்பட்டவர்களின் உள்ளங்களில் எழக்கூடும், நத்தையிலும் முத்துக் கிடைப்பதுபோல! ஆனால், ஏழை நொந்த வாழ்வு பெறுவது, ஒரு கொடிய முறை காரணமாக. அந்தமுறையை, தனி ஒருவனின் இரக்கம், பரிவு, தானம், தருமம் போன்றவைகளால் போக்கிடவோ, அந்த முறை காரணமாக ஏற்பட்டுவிடும் விபரீதங்களை நீக்கிடவோ முடியாது. இதைக் கூறும் துணிவே, பலருக்கு ஏற்படாது. ஓ. என்ரி இதனைக் கூறுவது மட்டுமல்ல, ஒரு சீமானின் மகன், ஏழையிடம் இரக்கம் காட்டும் பயணத்தைத் துவக்கினால், அந்தப் பயணம், எதிலே போய் முடியும், நடக்கக் கூடியது எதுவாக இருக்க முடியும் என்பதை, நகைச்சுவையுடன், ஆனால், அதேபோது இரண்டு சொட்டுக் கண்ணீரும் கிளம்பிடத் தக்கதானதாகக் கூறுவார்.

சரி! கதையை முழுவதும் கூறத்தான் வேண்டும்; கூறிவிடுகிறேன், தம்பி! கூறவேண்டியது அதிகமுமில்லை.

எங்கே நிறுத்தினேன் கதையை? ஆமாம்! அவள் கோபத்துடன், சீமான் மகனை வெளி ஏற்றுகிறாள்; அந்தக் கட்டத்தில்தான் நிறுத்தினேன்.

அடுத்த கட்டம் என்ன தெரியுமா, தம்பி?

இரண்டு மாதங்களுக்குப் பிறகு, அந்தக் கட்டம்.

இலட்சியமறிந்த நண்பன் இருக்கிறானே, அவனைக் காண்கிறோம். ஒரு பெரிய ரொட்டிக் கடை முதலாளி-