பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/85

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

77

தொடமாட்டார் பொன்பொருளைக் கொள
                                                              மாட்டார் மனமாசு!
பாடுபடும் ஏழைதுயர் பார்த்துப் பதறுகிறார்!
மாடுமனை மக்கள் பெற்று மகிழவழி கண்டிடுவார்!
பாலையெலாம் சோலையாகிப் பைங்கிளிகள்
                                                                                      பாடிடவே
செந்நெல் மணிக்குவியல் சேர்த்திடுவார் நாட்டினுக்கு!
உழைப்பை உறிஞ்சிவரும் உலுத்தரை ஒழித்திடுவார்!
மாளிகையின் சீற்றம்கண்டு மன்னர்
                                                                  அஞ்சிடமாட்டார்!
எப்பாடுபட்டேனும் இங்கு இல்லாமை
                                                                 போக்கிடுவேன்!
இதற்கன்றோ இன்னல்பல ஏற்றோம் பல ஆண்டு!
நாட்டினை வாழவைக்க நல் உறுதி
                                                               கொண்டுவிட்டோம்!
வீட்டை மறந்துவிட்டோம்; பாட்டை
                                                               வகுத்துவிட்டோம்!
நாட்டினுக்கு நற்செய்தி நவின்றதுடன் நில்லாமல்
நாளும் உழைக்கின்றார் நாம்வாழ, ஆளவந்தார்!

பாசுரம் இதுபோலப் பலப்பல பாடி, பல்லாண்டு கூறி, வரவேற்றனர் மக்கள் காங்கிரஸ் அமைச்சர்களை விடுதலை விழா முடித்து அவர்கள் நாடாளத் தொடங்கியதும் தன்னலம் இந்தத் தியாகிகட்கு இருக்க முடியாது; மகாத்மாவின் ஒளியிலே இருந்து இருந்து இவர்கள், எவர்க்கும் எழக்கூடிய சுயநலத்தைச் சுட்டெரித்து விட்டார்கள்; பரங்கி மூட்டிய அடக்குமுறைத் தீயிலே வீழ்ந்து வீழ்ந்து இவர்கள் புடம்போட்ட தங்கமாகிவிட்டனர்; இவர்கள் குடிமக்களைக் கசக்கிப் பிழிந்து கோலாகல வாழ்க்கை நடாத்தி வந்த குட்டிக் கோமான்களின் வழிவழி வந்தவரல்ல; குண்டுக்கும் தடியடிக்கும், சிறைக்கும் கொடுமைக்கும் தம்மைத்தாமே பலியிட்டுக் கொள்ளத் துணிந்த தூயவர்கள்; ஏழையுடன் ஏழையாய் இருந்து வந்தவர்கள்; ஏரடிக்கும் சிறுகோலின் மதிப்பை அறிந்தவர்கள்; பசியும் பட்டினியும் கண்டவர்கள்; கோடி கோடியாகக் கொட்டிக் காட்டினாலும் நேர் வழியினின்றும் இம்மியும் வழுவமாட்டார்கள்; இவர்களின் கரத்திலே ஆட்சிப்பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது,