பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/88

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

இன்னமும், கெய்ரான் காங்கிரஸ்காரரே!

இதனை நாட்டு மக்கள் மறந்துவிடவில்லை; இப்படிப்பட்டவர் இவர் என்று உயர்நீதி மன்றத்து முதல்வரொருவர் அறுதியிட்டுக் கூறியானபிறகும்,

கெய்ரான் காங்கிரஸ் கட்சியில்தான் இருக்கிறார்.

கெய்ரான் திரட்டிய பெருநிதி அவரிடமேதான் இருக்கிறது.

கெய்ரானின் ஆதரவாளர் காங்கிரசில்தான் உள்ளனர்.

கெய்ரானின் ஆதரவாளர் சட்டமன்றத்திலும் உள்ளனர்.

என்னென்ன காரணம் காட்டினாலும், எத்தனை சமாதானம் சொன்னாலும், எவரெவரைச் சான்றளிக்க வைத்தாலும், குற்றம் குற்றமே என்று தாஸ் அவர்கள் துணிந்து, நேர்மையுடன் தீர்ப்பளித்துவிட்டார்கள்.

இதற்குப் பிறகு, கெய்ரான் முதலமைச்சர் பதவியிலிருந்து வெளியேறினாரே தவிர, காங்கிரசை விட்டு அல்ல, பொதுவாழ்க்கையை விட்டும் அல்ல. அவர் இப்போதும் பாஞ்சாலத்துக் காங்கிரசில், குறிப்பிடத்தக்க பெரிய புள்ளி!

அவர்மட்டும் அல்ல, அவர் எந்தத் தவறும் செய்தவரல்ல, அவர்மீது கூறப்படுவன யாவும் வீணான பழி, அரசியல் பகைவர்களின் கோள் என்றெல்லாம் தாஸ் அவர்களிடம் சாட்சி சொன்னவர்களிலே பலர் சட்டமன்ற உறுப்பினர்கள்; அவர்கள் காங்கிரசிலே தான் உள்ளனர்; உயர்தர அதிகாரிகள் பலர்; அவர்கள் இப்போதும் அதிகாரிகளாகத்தான் இருக்கின்றனர். கெய்ரான் ஒருவர் தான் விலகினார்; அவருடைய ‘தர்பாருக்கு’த் துணைநின்றவர்கள், ஆட்சியில் பங்குதாரர்கள், பரிந்து பேசியோர், நீதிபதி நேர்மையானது என்று ஏற்றுக் கொள்ள இயலாத பொய்க் காரணம் பல காட்டி அவரைக் காப்பாற்றிட முனைந்தோர் அனைவரும், காங்கிரசிலும் இருக்கிறார்கள், சர்க்காரிலும் இருந்து கொண்டிருக்கிறார்கள். ஊழலும் இலஞ்ச இலாவணமும் ஒழிக்கப்பட்டு விடுவதற்கான முழு நடவடிக்கையைக் காங்கிரஸ் அமைப்பு எடுத்துக் கொண்டாகிவிட்டது என்றா பொருள்? நேர்மை உள்ளம் கொண்டவர்கள் எண்ணிப் பார்த்திட வேண்டும்.