பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/95

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

87

மழுப்பினர், இறுதியாக ஏதேனும் ஒரு நடவடிக்கை எடுத்தாலொழிய, பொதுமக்கள் மனத்திலே மூண்டுவிட்டுள்ள அருவருப்பை நீக்க முடியாது என்ற முடிவுக்கு வந்தனர். இந்தச் சமயத்தில், வேறோர் காலமாக இருப்பின் முனிபுங்கவர் ஆகியிருப்பார் என்று பலர் கருதத்தக்க முறையிலே பேசியும் உபதேசம் செய்துகொண்டும் உள்ள உள்துறை அமைச்சர் நந்தா புறப்பட்டார். இந்தியா முழுவதும் உள்ள போலீஸ் படை அவருடைய கட்டளைக்குக் காத்துக் கிடக்கிறது. பரவலாக நாடெங்கும் அமைந்துள்ள காங்கிரஸ் கமிட்டிகள் உள்ளன. ஜெயப்பிரகாஸ் நாராயணன் இருக்கிறார், கட்சிகள் வேண்டாம் கிராம அரசுகள் போதும் என்று கூறிக் கொண்டு; ஆதாரவாளர்கள் அணியும் ஒன்று இருக்கிறது வினோபா இருக்கிறார், அவருடைய சர்வோதய இயக்கம் இருக்கிறது. இத்தனை அமைப்புகளும் நந்தாவுக்குப் போதுமானதாக, ஆற்றல் கொண்டவையாகத் தோன்றவில்லை; என்ன காரணத்தினாலோ இந்த அமைப்புக்கள், இலஞ்ச ஒழிப்பு வேலையைச் செய்திட முடியும் என்ற நம்பிக்கை அவருக்கு ஏற்படவில்லை. அத்தகைய நம்பிக்கையே இல்லாமல் அவர் எதற்காகப் போலீஸ் படையை நடாத்திச் செல்லும் பொறுப்பில் இருக்கிறார் என்பதும் புரியவில்லை. ஒளிமிகு மின்சார விளக்கு கைவசம் இருக்க, அதைக் கொண்டு செல்லாமல் மின்மினிகளைப் பிடித்துக் கரத்தில் வைத்துக்கொண்டு அவை விட்டு விட்டுச் சிந்தும் ஒளியின் துணைகொண்டு இருட்டறையில் கருப்புப் பணத்தைத் தேடுகிறார்— கனம். நந்தா!!

இதற்காக அவர் சாதுக்களைக் கூட்டிவைத்துப் பேசினார்.

சதாசர் சமிதி என்றோர் அமைப்பை நிறுவி, குற்றம் குறைகூற விரும்புவோர், வருக! என்று அழைத்தார்,

இரண்டே ஆண்டுகளில் இலஞ்சப் பேயை விரட்டுவேன், இல்லையேல் நான் பதவியை விட்டு விலகிப்போவேன் என்று நந்தா சபதம் எடுத்துக்கொண்டார். ஆகவே, இரண்டு ஆண்டுகளுக்குள் இலஞ்சத்தை ஒழித்ததாகக் காட்டியாக வேண்டும். ஒரு புதிய அமைப்பு மூலம் இந்தக் காரியத்தைச் செய்யத் தொடங்கினால், அந்த அமைப்பும் அவருடைய ஆதீனத்துக்குக் கட்டுப்பட்டதாக